Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    
இலங்கை அரசுடன் கண்டிப்புடன் பேசி மீனவர்களை தமிழகம் கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன்புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் முதல் முறையாக இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை, முன்னாள் எம்.பி.க்கள் ராம்பாபு, சித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம் சேதுபாண்டி, விஜயபிரபாகரன், ஆபிரகாம், சிலுவை மற்றும் திரளானோர் வரவேற்றனர்.
பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
புதிய கட்சி அறிவிப்புக்கு பின்னர் மதுரைக்கு முதல் முறையாக வந்துள்ளேன். கட்சியினர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய கட்சி, புதிய சூழலில் புதிய எதிர்பார்ப்பு ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.
மக்கள் பிரச்சினைகளை முன் நிறுத்தி, புதிய கட்சியின் செயல்பாடு இருக்கும். அவர்களது நம்பிக்கைக்கு ஏற்றவாறு எங்கள் கட்சியின் நடவடிக்கை இருக்கும்.
எளிமை, தூய்மை, நேர்மை மற்றும் கடின உழைப்புடன் கட்சியினர் செயல்பட்டு குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சென்று அங்குள்ள மக்கள் பிரச்சினைகளை இனம் கண்டு அதனை தீர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை தீர்த்து வைப்பதில் பாலமாக செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு ஜி.கே.வாசன் அளித்த பதில்களும் வருமாறு:–
கே: மீனவர் பிரச்சினைக்காக சட்டமன்றத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?
ப: மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆட்சியாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் கண்டிப்புடன் பேசி, சிறையில் இருக்கும் மீனவர்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்கு புனையப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மீனவர்களை தமிழகம் அழைத்து வரவேண்டும்.
கே: தமிழகத்தில் சட்டம்– ஒழுங்கு எப்படி உள்ளது?
ப: சிறு, சிறு பிரச்சினைகள் கூட நடக்க கூடாது என்பது எங்கள் கட்சியின் கொள்கை. கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், முற்றுப்புள்ளி வைக்கவும், சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும்.
கே: மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து...
ப: சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. சிறுபான்மை–பெரும்பான்மை மக்களுக்கு இடையே பாலமாக உள்ளதா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
கே: கட்சியை விட்டு விலக வேண்டாம் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறாரே?
ப: அவருக்கு நன்றி. எங்கள் கட்சியில் தொண்டர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், புதிய உறுப்பினர்களாக சேர முன்வந்துள்ளனர். ஏற்கனவே இருப்பவர்களுடன் இவர்களும் இணைவதால் கட்சி பெரிதும் வளரும். மக்களின் நம்பிக்கை பெற்று முதல் இயக்கமாக செயல்படுவோம். திருச்சி மாநாட்டில் இயக்கத்தின் பெயர் அறிவிக்கப்படும். பெயர் குறித்து தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டரீதியாக செய்ய வேண்டிய பணிகளை செய்ய ஒருவார கால அவகாசம் வேண்டும். லட்சியத்தை அடைய எங்கள் கட்சிக்கு பெரிய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்

0 comments: