Friday, November 14, 2014

On Friday, November 14, 2014 by Unknown in ,    

ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பால் பாசன நீர்வரத்து பாதிப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை         


கரூர், திருக்காம்புலியூர் பகுதி அமராவதி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் வாய்க்கால்களில் கரூர் பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் மிகப் பெரிய வாய்க்காலாகும். அமராவதி ஆற்றில் இருந்து இந்த பாசனவாய்க்கால்களு க்கு தண்ணீர் வருகிறது. பைபாஸ் சாலையில் இருந்து கரூர் குளத்துப்பாளையம், வெங்கமேடு, அருகம்பாளையம் வழியாக பாலம்மாள்புரம், அரசு காலனி வரை நீர் செல்ல வேண்டும். ஆனால் பைபாஸ் சாலையில் வாய்க்கால் அடைப்பு காரணமாக நீர் வரத்து தடைபட்டது. வாய்க்கால் கிளைகளில் ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர் நிலைகளை மறித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்றும், நாளுக்குநாள் வாய்க்கால் பகுதியில் கட்டடங்கள் பெருகி வருவதால் வாய்க்கால் சுருங்கி வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
 சமீபத்தில் அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும் ஆக்கிரமிப்பு காரணமாக திருக்காம்புலியூர், கரூர் பைபாஸ் சாலையில் உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீர் வரவில்லை. வந்த நீரும் வேறு பாதையில் வழிந்தோடி விட்டது.
 கரும்பு, வாழை, நெற் பயிர்கள் சாகுபடிக்கு தயாராக இருந்தும் திறந்து விடப்படும் தண்ணீர் வாய்க்கால் அடைப்பால் வந்து சேரவில்லை. ராஜ வாய்க்காலின் கிளைகளில் ஆக்கிரமிப்புடன், சீத்தை முட்களும் வளர்ந்து காணப்படுகிறது.
அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் பல்வேறு வாய்க்கால்களில் பாசனத்திற்கு சென்றாலும் பள்ளபாளையம் ராஜவாய்க்கால்தான் மிகப்பெரிய வாய்க்காலாகும். இந்த வாய்க்கால் அணைப்பாளையம் பகுதியில் தொடங்கி திருமுக்கூடலூர் வரை கடை மடை பகுதி இருக்கிறது. ஆனால் தற்போது பாசன பகுதிகள் என பார்த்தால் அதற்கு முன்னதாக பஞ்சமாதேவி கிராமத்துடன் நிறைவு பெறுகிறது. அமராவதி ஆறுதான் திருமுக்கூடலுர் என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.
 இது குறித்து விவசாயி ராமசாமி கூறுகையில், ஆண்டாண்டு காலமாக ராஜவாய்க்கால் நீரை பயன்படுத்தி பாசனம் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது பைபாஸ் சாலை அமைக்கப்பட்டதில் இருந்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. வாய்க்கால் பகுதியில் பெரிய அளவில் வணிக பயன்பாட்டு கட்டடங்களை கட்டுகின்றனர். மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் வாய்க்காலில் கொட்டப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்கால் எல்லைகளை கண்காணித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை. முன்பு பொதுப்பணித்துறை அமராவதி வடிநிலக்கோட்ட அலுவலகம் கரூரில் இதுவரை  இயங்கிக் கொண்டிருந்தது. கடந்த ஓராண்டாக இங்கிருந்த அலுவலகத்தை தாராபுரத்திற்கு மாற்றி விட்டனர். இதனால் இப்பகுதி அமராவதி பாசன விவசாயிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை. குறைகளை கூறுவதற்கும் இயலவில்லை என்றார். எனவே சான நீர் தடையின்றி வர ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.      

0 comments: