Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்க திமுக ஆட்சி அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுரை மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒத்தக்கடையில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறேன். மதுரை மாவட்டத்துடன் 26 ஆய்வுக் கூட்டங்கள் முடிந்தன. இனி அடுத்து தேனி, நீலகிரி, சேலம், தர்மபுரி அதன் பின் தென்சென்னை, வட சென்னையுடன் ஆய்வு கூட்டம் முடிகிறது. இந்த ஆய்வு கூட்டப்பணியை சிறப்பாக செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
2011ம் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்த 3 ஆண்டுகளில் ஜெயலலிதா ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் இவை அனைத்தும் ஏட்டளவில் தான் உள்ளன. எந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்து அவருக்கு பதவியும் பறிபோனது. ஜெயலலிதா உத்தரவுப்படி முதல்–அமைச்சராக பன்னீர் செல்வம் பதவி ஏற்று இருக்கிறார். ஆனால் அவர் இன்னும் முதல் அமைச்சர் அறையில் கூட அமரவில்லை. அங்குள்ள பலகையை இன்னும் கூட மாற்றவில்லை.
2006 முதல் 2011ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சி மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா விமர்சித்தார். ஆனால் கருணாநிதி 5 ஆண்டுகள் ஆட்சி செய்து சாதனை படைத்தார். ஆனால் ஜெயலலிதா தற்போது மெஜாரிட்டியாக இருந்தும் பதவியை இழந்து விட்டார். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பன்னீர் செல்வம் செயல்படாமல் இருக்கிறார்.
காவிரி முல்லைப் பெரியாறு விஷயத்தில் கர்நாடகமும், கேரளாவும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளன. ஆனால் தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தை கூட்ட முடியாத நிலையில் பன்னீர் செல்வம் இருக்கிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. தினமும் கொலை கொள்ளைகள் தான் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால் தலைவர் கலைஞர் தலைமையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தமிழரசி, மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

0 comments: