Wednesday, November 05, 2014

On Wednesday, November 05, 2014 by Unknown in ,    

அதிகாரிகள் மெத்தனத்தால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு .................  கரூர் மாவட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வரும் மெத்தனப் போக்கால் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. டீக்கடைகள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை எளிதில் மக்கிப்போகாது. மேலும் மறுமுறை பயன்படுத்தவும் முடியாது. இந்த பிளாஸ்டிக் கப்புகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. வடிகால்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. துப்புரவு பணியிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக் கப்புகளை தடை செய்யவேண்டும் என நீண்ட காலமாக சுற்றுச்சூழல் இயக்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். நகராட்சிகளாக செயல்பட்ட கரூர், இனாம்கரூர், தாந்தோணி பகுதிகளில் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. தற்போது ஒரேநகராட்சியாக இணைக்கப்பட்டு செயல்படுகிறது. ஒருங்கிணைந்த நகராட்சியிலும் தடை தீர்மானம அமலுக்கு வந்தது. இருந்தும் பாலிதீன் பிளாஸ்டிக் பயன்பாடு தடுக்கப்படவில்லை.


அவ்வப்போது நகராட்சி அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்கினறனர். எனினும் உறுதியான நடவடிக்கை எதுவும் இல்லாமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதால் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், கேரி பேக்குகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகளை வழங்கினர். துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து டீக்கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து பேப்பர் கப் அல்லது கண்ணாடி கிளாஸ்களில் தான் டீ வழங்கப்பட்டு வந்தது. தொடர் நடவடிக்கை இல்லாமல் போனதால் மீண்டும் பயன்பாட்டில் அத்தனை பொருட்களும் உள்ளன. மொத்தமாக டீ, காபி போன்றவற்றை வாங்கி சென்று விநியோகிப்பவர்கள் பிளாஸ்டிக் கப்புகளையே பயன்படுத்துகின்றனர்.

தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படாததன் காரணமாக மீண்டும் பிளாஸ்டிக் கப்புகள் டீக்கடை மட்டுமின்றி, திருமண மண்டபங்கள், கூட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவிழாக்களிலும் பிளாஸ்டிக் கப் தான், மேலும் இவை களை மிஞ்சும் வகையில் அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளிலும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டு கொள்ளாத நிர்வாகம்
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், பிளாஸ்டிக் கழிவுகள்  அதிக அளவில் டாஸ்மாக் பார்களில் இருந்து தான் வருகிறது. டாஸ்மாக் பார்கள் அரசின் மேற்பார்வையில் இருப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவோ, அப்புறப்படுத்தவோ உரிய நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால் என்னகாரணத்தினாலேயோ டாஸ்மாக் நிர்வாகம் இதனை கண்டுகொள்வதில்லை. பல மாவட்டங்களில் பேரூராட்சி, பஞ்சாயத்து நிர்வாகங்கள் கூட பிளாஸ்டிக்பொருள் பயன்பாட்டை தடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பல கடைகளில் போர்டு வைத்துள்ளனர். கேரிபேக்குக்குகட்டணம் வசூல் என அறிவித்து அதன் பயன்பாட்டை குறைக்கின்றனர். பெரிய அளவில் பறிமுதல் செய்து அழித்துவிடுகின்றனர். ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் கரூர் மாவட்டத்தில் இல்லை என்று புகார் தெரிவித்தனர்.

0 comments: