Thursday, December 25, 2014

On Thursday, December 25, 2014 by farook press in ,    
திருப்பூரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். அவர் புதிய மின் இணைப்புக்காக வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 47). இவர் இடுவம்பாளையத்தில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். திருப்பூர் ஆண்டிபாளையம் லிட்டில்பிளவர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் அதே பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அவருடைய கட்டிடத்திற்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக இடுவம்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக ரமேஷிடம் இளங்கோவன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் ரமேஷ் ரூ.50 ஆயிரம் பணத்தை மொத்தமாக கொடுக்க இயலாது. அதை தவணை முறையில் கொடுக்க முடியும் என்று ரமேஷ் கூறியதையடுத்து அதற்கு இளங்கோவன் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் ரமேஷ் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் ரமேஷிடம் கூறிய அறிவுரையின்படி நேற்று காலை அவர் இடுவம்பாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். மேலும் அவர் இளங்கோவனிடம் முதல் தவணையாக கொடுப்பதாக கூறிய ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் இளங்கோவனை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் நேற்று காலை 12 மணி முதல் மாலை 6 மணி வரை இடுவம்பாளையம் மின்வாரிய அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். இந்த அப்போது அங்கு கணக்கில் வராத பணம் ஏதாவது உள்ளதா என்றும் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இந்த சோதனையால் நேற்று காலை முதல் மாலை வரை மின்வாரிய அலுவலகத்தின் முன்பக்க கதவு பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் இளங்கோவனை கைது செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். திருப்பூரில் புதிய மின் இணைப்புக்காக ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: