திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக பெண் களுக்கு பாதுகாப்பு வசதிகள் இல்லா மல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு புத்தாண்டை யொட்டி, நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஏற்கெனவே சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதிய நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் கன்னியாகுமரிக்கு கூடுதல் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்து செல்வர்.
குமரி குற்றாலம்
‘குமரி குற்றாலம்’ என்றழைக் கப்படும் திற்பரப்பில் வெறும் அருவிதான் கொட்டுகிறது. பிற வசதிகள் முறையாக இல்லாததால், பயணிகள் முகம் சுழித்து செல்வதை காணமுடிகிறது. பெண்கள் உடை மாற்றும் அறை போதிய வசதிகளுடன் இல்லாததால், குடும்பத்தினருடன் வரும் பலரும் அருவியில் குளிக்க தயங்குகின்றனர்.
பொதுப்பணித்துறை வசம் உள்ள அருவி செல்லும் இடத்தில் நவீன கழிவறை கட்டும் திட்டம் குறித்து நிலையான முடிவை எடுக்க முடியா மல் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி கள், அதிகாரிகள் திணறி வருகின் றனர்.
பெயருக்கு படகு இல்லம்
மேலும், படகு இல்லத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட படகுகள் முழுவதும் சேதமாகி உள்ளன. இரு படகுகள் மட்டுமே பெயரளவுக்கு செயல்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்து செல்வதால், படகு இல்லத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை கிடப்பில் உள்ளது.
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி பினோ கூறியதாவது:
கேரள மாநிலத்தில் உள்ள அழகான அருவிகளுக்கு இணை யாக திற்பரப்பு அருவி உள்ளது. ஆனால், போதிய வசதிகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பெண்கள் அதிகமாக வருவதால், உடை மாற்றும் அறைக்கு போதிய வசதிகள் செய்து தர வேண்டும். படகு இல்லப் பராமரிப்பு மோசமாக உள்ளது. சுற்றுலா துறை திற்பரப்பு அருவியில் போதிய வசதி செய்து கொடுக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
இதைப்போல் நாளுக்கு, நாள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் திற்பரப்பு அருவி பகுதியில் நிலவுகிறது. பாதுகாப்பு விஷயத்தில் மேலும் அக்கறை செலுத்தவேண்டும். மொத்தத்தில், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மேம்படுத்த என்ன வழி?
திற்பரப்பு அருவி பகுதியில் கழிப்பிடம் மற்றும் உடை மாற்றும் அறைகளை முறையாக பராமரித்தாலே, பயணிகளுக்கு போதிய வசதிகள் கிடைக்கும்.
மேலும், திற்பரப்பு அருவி பகுதி திற்பரப்பு டவுன் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும், படகு இல்லம் கடையாலுமூடு டவுன் பஞ்சாயத்து எல்லைக்கும் வருகிறது. இவ்விரு டவுன் பஞ்சாயத்துகளும் இணைந்து நிதி ஒதுக்கி சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.