Thursday, December 25, 2014

On Thursday, December 25, 2014 by farook press in ,    
ஆறு மாத கால மோடி அரசின் அடி மேல் அடியால் மாட்டு மக்கள் தலையில் இடி மேல் இடி இறங்கிக் கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாட்டின் நிறைவாக ஊத்துக்குளி பி.ராமமூர்த்தி நினைவுத் திடலில் (ஈஸ்வரன் கோயில் திடல்) பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உ.வாசுகி பேசியதாவது: மத்தியில் ஆறு மாத கால பாரதிய ஜனதா ஆட்சியில் நாட்டு மக்கள் மீது எண்ணற்ற தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. விலைவாசி கட்டுப்படுத்தவில்லை, விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. உயிர் காக்கும் மருந்து விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்கள் குறைந்தபட்சம் அந்த மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம் என்று நம்பிக்கைகூட வைக்க முடியாது. இதைப் பற்றி யாராவது எதிர்த்துப் பேசினால், போராடினால் உடனே, வளர்ச்சி வராது என்று பாரதிய ஜனதா தலைவர்கள் கூறுகின்றனர். பாரதிய ஜனதா கூறும் வளர்ச்சி யாருக்கானது என்று மக்கள் கேட்க வேண்டும் என தேர்தலுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கட்சி கூறியது.
மோடி வெளிநாட்டுக்குப் போகும்போது கூடவே முதலாளிகளையும் கைகளில் பிடித்துக் கொண்டு செல்கிறார். அத்தோடு பாரத ஸ்டேட் வங்கி உயர் அதிகாரியையும் அழைத்துச் செல்கிறார். ஆஸ்திரேலியாவில் அதானி நிலக்கரி சுரங்கத்தை பேரம் பேசுவதற்கு அங்கேயே பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி ரூ.6500 கோடி அள்ளிக் கொடுக்கிறார். 
அணு உலை விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தர வேண்டும் என்ற சட்டப் பிரிவை தளர்த்துவது, காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிப்பது என மோடி - ஒபாமா கூட்டறிக்கை என்பது இந்தியாவில் மொத்தத்தையும் அவர்களுக்கு விற்பதற்கான ஒப்பந்தமாகும்.
வளர்ச்சி ஏற்படுத்துகிறோம் என்று தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் சொன்னது நூறு சதவிகிதம் கலப்படமற்ற பொய்கள் என்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் கையில் நாடு சிக்கியுள்ளது. இவர்களிடம் சிக்கினால் நாடு எப்படி உருப்படும்? சாவர்க்கரின் வாரிசுகள் தேசிய கொடியை ஏற்றுவதைவிட அவமானம் இந்த தேசத்துக்கு வேறென்ன இருக்க முடியும்?
தமிழையும், தமிழகத்தையும் பாதுகாக்க பாரதிய ஜனதா மாநிலத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அமித் ஷா கூறியிருக்கிறார். ஏற்கனவே எல்லாவற்றையும் இந்திக்கு மாற்றுகிறார்கள். இவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டே தமிழை போட்டு மிதிக்கிறார்கள். மாநிலத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழும், தமிழகமும் எப்படி உருப்படும்?
இவர்கள் ஆட்சியில் முற்போக்கு சிந்தனை, அறிவியல் பார்வைகளை முடக்கி பிற்போக்கு சிந்தனை, கற்பனாவாதத்தை திணிக்கின்றனர். தேசத்தின் எதிர்காலத் தலைமுறை சரியான மூடர்களாக வளர வேண்டுமா? இதை அனுமதிக்கலாமா? 
பாரதிய ஜனதா உள்ளிட்ட சாதி, மத கட்சிகளுக்கு நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது.  எத்தனை பெயர்களில், எத்தனை வடிவங்களில் வந்தாலும் தாராளமயக் கொள்கையை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை நாம் ஏற்கக்கூடாது. அவர்களைத் தோற்கடிக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். வர்க்க, வெகுஜன அமைப்புகளை வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு உ.வாசுகி கூறினார்.
கே.தங்கவேல் எம்.எல்.ஏ.,
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., பேசினார். தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு சில விலையில்லா பொருட்களைக் கொடுத்துவிட்டு, அடிப்படையான பிரச்சனைகளில் நெருக்கடியை அதிகரிக்கிறது. பால்விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என சாமானிய மக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துகின்றனர். முதலமைச்சர் ஒருவரே நான்காண்டு சிறை, நூறு கோடி அபராதம், பதவி பறிப்பை சந்தித்தது வேறெங்குமே இல்லை. ஆனால் மீண்டும் அம்மா ஆட்சி வரும் என்று அக்கட்சியினர் பூஜைகள், மண் சோறு சாப்பிடுவது, தொண்டர்களுக்கு மொட்டை போடுவது, ஒப்பாரி வைத்து அழும் போராட்டம் நடத்துவது என செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எந்த நாகரிகம், பண்பாடும் இல்லாமல் அதிமுக, அரசியலை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறது.
இவர்களது ஊழலை எதிர்ப்பதாக வேறு கட்சிகளும் கூறுகின்றனர். ஒரு கட்சியின் ஊழலை மற்ற கட்சிகள் எதிர்க்கலாம். ஆனால் ஊழலுக்கு மூலகாரணம் என்ன என்பதை மற்ற கட்சிகள் சொல்வதில்லை. தனியார்மயம் தான் ஊழலின் ஊற்றுக்கண் என்று மார்க்சிஸ்ட் கட்சி சரியாகச் சொல்கிறது. எனவே தனியார்மயக் கொள்கையை எதிர்க்காமல் இந்த ஊழல்களைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே தமிழகத்தில் தனித்துவமான மார்க்சிஸ்ட் கட்சியை ஆதரித்து பொது மக்கள் வலுப்படுத்த வேண்டும் என்று கே.தங்கவேல் எம்.எல்.ஏ. கூறினார்.
முன்னதாக இக்கூட்டத்தில் மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, செ.முத்துக்கண்ணன் ஆகியோர் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமை ஏற்றார். ஊத்துக்குளி தாலுகா குழுச் செயலாளர் கை.குழந்தைசாமி வரவேற்றார். நிறைவாக ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.கே.கொளந்தசாமி பேசினார்.

தேர்த்திருவிழா போல!
ஊத்துக்குளியில் வழக்கமாக கோயில் தேர்த்திருவிழா சமயத்தில்தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அந்த அளவுக்கு இதுவரை வேறு எந்த ஒரு இயக்கமும், அரசியல் அமைப்புகளும் மக்களைத் திரட்டியதில்லை. ஆனால் செவ்வாயன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டுப் பேரணியிலும், பொதுக் கூட்டத்திலும் ஊத்துக்குளி தேர்த்திருவிழா அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதியது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

0 comments: