Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by Unknown in ,    
மதுரை அருகே சத்திரப்பட்டியில் விவசாயி வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி பகுதியில் குடியிருப்பவர் செந்தில்குமார் (34). விவசாயி. இவரது மனைவி சரிதா (30). இவர்கள் குழந்தைகள், தந்தையுடன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவரது வீட்டுக்கு திங்கள்கிழமை அதிகாலை ஹெல்மெட் மற்றும் துணியால் முகத்தை மூடிய நிலையில் வந்த 4 மர்மநபர்கள், வெளியிலிருந்த இரும்புக் கேட்டையும், உள்புறம் இருந்த மரக்கதவின் பூட்டையும் வெல்டிங் மூலம் சேதப்படுத்தி வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அங்கு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் கண்விழித்த செந்தில்குமார் கொள்ளையரைக் கண்டு திடுக்கிட்டு, குழந்தையை வாங்க முயற்சித்தார். உடனே கொள்ளையரில் ஒருவர் கத்தியால் செந்தில்குமாரின் வலது மணிக்கட்டில் வெட்டியுள்ளார். அதன்பின் நகைகளை கழற்றித்தருமாறு கொள்ளையர் மிரட்டியதால், சரிதா தனது கழுத்தில் கிடந்த 10 பவுன் நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளார். குழந்தைகளிடமிருந்தும் நாலரைப்பவுன் நகைகளை கொள்ளையர் கழற்றியுள்ளனர். அதன்பின் பீரோ மற்றும் செந்தில்குமாரிடமிருந்த ரூ. 13,000ம், செல்போன்கள், ஏ.டி.எம்.கார்டுகளையும் பறித்துக்கொண்டு சென்றனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த, மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்ட நிலையில், 2 பேர் வெளியே நின்றிருக்கலாம் எனவும், கார் அல்லது இருசக்கர வாகனங்களில் வந்திருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு டி.கல்லுப்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டிலும் மர்மக்கும்பல் காரில் வந்து கொள்ளையடித்தனர். அதேபோல இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீஸார் கருதுகின்றனர். இதுகுறித்து சத்திரபட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
துப்பாக்கியை காட்டி...
செந்தில்குமார் வீட்டிலிருந்து கொள்ளையர்கள் வெளியேறும்போது வாசலில் நின்ற காரையும் எடுத்துச்செல்ல முயன்றனர். அப்போது கார் நண்பரிடம் இரவல் வாங்கியது என செந்தில்குமார் கூறியதால் விட்டுச் சென்றுள்ளனர். வந்திருந்த கொள்ளையர்களில் ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அதை வைத்து சுட்டு விடுவதாக மிரட்டியதாகவும் விசாரணையில் செந்தில்குமார் தெரிவித்தார்

0 comments: