Monday, January 12, 2015

On Monday, January 12, 2015 by Unknown in ,    
திருப்பூரில் இரு வேறு இடங்களில் போலீஸ் போல் நடித்து இருவரிடம் ரூ.30 ஆயிரம் பணம், 3.5 பவுன் தங்க மோதிரங்கள் பறிக்கப்பட்டன.
தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் நடராஜ் (63). இவர் திருப்பூரில் தென்னம்பாளையம் பகுதியிலுள்ள தனது தம்பி வீட்டுக்குச் செல்ல சனிக்கிழமை இரவு வந்துள்ளார். தொடர்ந்து, தென்னம்பாளையம் நடுநிலைப் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கதக்க நபர் ஒருவர், தன்னை சிபிசிஐடி போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டதுடன், நடராஜ் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க மோதிரங்களை கழற்றி பாக்கெட்டில் போட அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர், நடராஜை சோதனை செய்வது போல அவரது பாக்கெட்டில் இருந்த இரு தங்க மோதிரங்கள், ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து நடராஜ் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இதேபோல், திருப்பூர் கணக்கம்பாளையம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி(53). இவர் சனிக்கிழமை இரவு திருப்பூர் மேட்டுப்பாளையத்துக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெருமாநல்லூர் சாலை அண்ணா நகர் பகுதியில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 30 வயது மதிக்கதக்க நபர், இவரது வாகனத்தை நிறுத்தியுள்ளார். மேலும், தான் விஜயமங்கலம் காவல் நிலைய பறக்கும் படை காவலர் என அறிமுகம் செய்து கொண்டதுடன் மூர்த்தி அணிந்திருந்த 2 பவுன் தங்க மோதிரத்தை கழற்றி பாக்கெட்டில் போட அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர், அவரை சோதனை செய்வது போல, பாக்கெட்டில் இருந்த 2 பவுன் தங்க மோதிரம், ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அந்த நபர் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து மூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ் விரு சம்பவங்கள் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: