Monday, January 19, 2015

On Monday, January 19, 2015 by Unknown in ,    
அதிபர் மிச்செல் மார்ட்டெலி பதவிவிலகக் கோரி தலைநகர் போர்டா பிரின்சில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.

ஹைதியில் அதிபர் பதவிவிலகக்கோரி போராட்டம்


கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சியும் காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க முயன்றுவருகினறனர்.
 
எல்லோரும் ஏற்கக்கூடிய ஒரு அரசை அடுத்த 48 மணி நேரத்தில் அமைக்க எதிர்க்கட்சிகளுடன் பேசி, ஒரு ஒப்பந்தத்திற்கு வந்திருப்பதாகவும் அதனால் அமைதி காக்கும்படியும் மார்ட்டெலி கோரிக்கைவிடுத்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதனால், தற்போது ஹைதியில் இயங்கக்கூடிய அரசு ஏதும் இல்லை.
 
நாட்டின் அதிபராகத் தொடர்ந்து செயல்படுவதற்காக மார்டெலி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
 
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகான நாடாளுமன்றத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியிருப்பதாக இரு வாரங்களுக்கு முன்பாக மார்டெலி அறிவித்தார். ஆனால் இழுபறி நீடித்தபடியே இருந்துவருகிறது.
 
நாடாளுமன்றம் கலைப்பு
 
இந்த அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டதாக, திங்கட்கிழமையன்று மார்டெலி அறிவித்தார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே எதிர்க்கட்சிகளுடன் எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படாமல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
 
நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், ஹைதியில் அரசுக்கு எதிராகப் பல மாதங்களாகப் போராட்டம் நடந்துவருகிறது.
 
ஹைதியின் பிரதமராகஇருந்த லாரென்ட் லமோத் டிசம்பர் 14ஆம் தேதியன்று ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக, பத்திரிகையாளராக இருந்த இவான் பால் பதவியேற்றார். இருந்தபோதும் மார்டெலி பதவிவிலக வேண்டுமெனக் கோரி, போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
 
அந்நாட்டின் மேலவைக்கு நடக்க வேண்டிய தேர்தல்கள் 2012ஆம் ஆண்டு மே மாதமே நடந்திருக்க வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்.
 
அக்டோபர் 26ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசுக்கும் மேலவை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒரு பகுதியினருக்கும் இடையில் தேர்தல் சட்டம் குறித்து உடன்பாடு எட்டப்படாததால், தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டன.
 
2010ஆம் ஆண்டில் ஹைதியில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் நினைவு தினம் திங்கட்கிழமையன்று அனுஷ்டிக்கப்பட்டது.

0 comments: