'ஐ' படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அப்படத்தில் நடித்த திருநங்கை ஒஜாஸ் ரஜானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஐ' படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோருடன் திருநங்கை ஒஜாஸ் ரஜானியும் நடித்துள்ளார். இவர் இந்தி திரையுலகில் பிரபலமான ஒப்பனை கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஐ' படத்தில் திருநங்கைகளை தவறாக சித்தரித்துள்ளார் இயக்குநர் ஷங்கர் என்று திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குநர் ஷங்கர், விக்ரம், சந்தானம் ஆகியோர் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஒஜாஸ் ரஜானி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் அவர் கூறியிருப்பது:
"'ஐ' திரைப்படத்தில் எனது கதாப்பாத்திரத்தை இயக்குநர் ஷங்கர் தாழ்த்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. சொல்லப்போனால் எனது கதாப்பாத்திரத்தை அவர் நல்ல முறையில் கதையில் வடிவமைத்துள்ளார். கதையில் நான் விக்ரம் கதாப்பாத்திரத்தை காதலிக்க வேண்டும். அந்தக் காதலை எனது இயல்பில் வெளிப்படுத்தும் விதமே படத்திலும் இடம்பெற்றுள்ளது.
அதனால், இந்தப் படத்தை எதிர்த்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை நினைத்து நாம் பெருமைகொள்ள வேண்டும். தற்போது நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஆகையால், என்னால் நேரில் உங்களிடம் பேச முடியவில்லை. எனது இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு 'ஐ' படத்துக்கு எதிராக போராட்டங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்