Wednesday, February 25, 2015

On Wednesday, February 25, 2015 by Unknown in ,    
உயர்கல்வி ஆலோசனை வழங்கல், உடல்நலம், மனநலம் பேணல், கலைப் பயிற்சி அளித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நான்கு இடங்களில் இளைஞர் மேம்பாட்டு மையங்களை மதுரை மாநகராட்சி தொடங்குகிறது.
 மாநகராட்சி மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாமன்ற சிறப்பு அவசரக் கூட்டம் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையர் சி.கதிரவன், துணைமேயர் கு.திரவியம் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் இளைஞர் மேம்பாட்டு மையம் தொடங்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
 இந்த தீர்மானப் பொருள் மீது மேயர் ராஜன்செல்லப்பா பேசியது:
 மாநகராட்சிப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கல்வி, உடல்நலம் மற்றும் மனநலத்தை கருத்தில் கொண்டு நான்கு மண்டலங்களிலும் இளைஞர் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். அதில் உயர்கல்வி மேம்பாட்டுப் பிரிவு தொடங்கப்பட்டு, உயர்கல்வி, கல்விக் கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையுடன் இணைந்து விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு  தொடங்கப்படும்.  இளைஞர்களிடம் கலை மேம்பாட்டுப் பிரிவு தொடங்கப்பட்டு மிருதங்கம், வயலின், கிடார் உள்ளிட்ட இசைக்கருவிகளில் பயிற்சி அளிக்கப்படும். 
இந்த மேம்பாட்டு மையத்தினை நான்கு மண்டலப் பகுதிகளில் இடம் தேர்வு செய்து அரசின் மானியம் மற்றும் தனியார் பங்களிப்புடன் ஜீரோ பட்ஜெட் திட்டம் என்ற முறையில் தொடங்கப்படும் என்றார்.
 நிலவேம்புக் குடிநீர்: டெங்கு மற்றும் இதர நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் மாநகராட்சி மருத்துவமனைகளில் நிலவேம்புக் கசாயம் மற்றும் மலிவு விலையில் மூலிகைச்சாறுகள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர்களாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், ம.முத்துராமலிங்கம், ஆர்.சுந்தர்ராஜன், மக்களவை உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்ட அரங்கின் முன்பு ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி 67 கிலோ எடை, 67 அடி நீளத்தில் தயார் செய்யப்பட்ட கேக் வெட்டப்பட்டது.
 எம்.எல்.ஏ மயக்கம்: மாநகராட்சியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மத்திய தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.சுந்தர்ராஜன் கலந்து கொண்டார். கூட்டம் ஆரம்பிக்கும் முன்னதாக அவர் நாற்காலியில் அமர்ந்தபடி மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து தூக்கி அமரவைத்தனர்.
 சுதாரித்த எம்.எல்.ஏ. தனக்கு சர்க்கரை அளவு குறைந்ததால் ஏற்பட்ட மயக்கம் எனக்கூறி கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டார்.

0 comments: