Friday, February 06, 2015

On Friday, February 06, 2015 by farook press in ,    
அவினாசியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவினாசி குமரன் வீதியை சேர்ந்த ரமேஷ்(வயது 33), பனப்பாளையம் முத்துநகர் பகுதியை சேர்ந்த நேசமணி(28), வேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடைய மகன் ஜீவா(6), சரவணகுமார் என்பவருடைய மகள் கவுசல்யா(10), அணைப்புதூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த குமாரசாமி மகள் பிரபா(15) ஆகியோருக்கு திடீர் காய்ச்சல் காரணமாக அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண காய்ச்சல் தான் என்றும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவில் எந்தவிதமான காய்ச்சல் என்று கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவினாசி வட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு தடுப்பு முகாம் குலாலர் திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமுக்கு ஒன்றிய குழு தலைவர் பத்மநந்தினி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகோபால், ஆணையாளர் செல்வராஜ், உதவி தொடக்க கல்வி அதிகாரி மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது என்றும் பரவாமல் தடுக்க எவ்வாறு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கொசு உற்பத்தியை தடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து திரை மூலம் காண்பிக்கப்பட்டது.
இதில் ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிகுழுவினர், மருத்துவ அலுவலர்கள், சுகாதார செவிலியர்கள் உள்பட 300–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அவினாசி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு கூட்டத்துக்கு செயல் அலுவலர் மணி தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:–
காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு வராமல் இருக்கும் மாணவ–மாணவிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் விலாசங்களையும் பேரூராட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும் பேரூராட்சியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் ஆய்வு நடத்தப்படும். ஆய்வின் போது குடிநீர் தொட்டிகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டறிந்தால் குடியிருப்புகளுக்கு ரூ.200–ம், ஓட்டல்கள், கடைகளுக்கு ரூ.1000–மும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: