Sunday, February 08, 2015

On Sunday, February 08, 2015 by Unknown in ,    
தேனி மாவட்டம், பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கத் தடை விதிக்கக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதிமுக பொதுச் செயலர் வைகோ பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலர் சார்பில் மும்பை பாபா அணுசக்தி மையத்தின் இயக்குநர் சேகர்பாசுவின் பதில் மனுவை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

நியூட்ரினோ மையம் அமைக்க நாட்டில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இறுதியில் தேனி மாவட்டம், பொட்டிப்புரத்தில் அமைக்க முடிவானது. இந்த ஆய்வு மையம் அமைப்பதற்கு, ஆயிரம் மீட்டர் சுற்றளவில் பாறை இருக்க வேண்டும். அந்த வகையில் பொட்டிப்புரம்தான் தகுதியான இடம். இங்கு 1910 மீட்டர் நீளத்துக்கு பாறையில் குகை அமைக்க முடியும். இந்த இடத்தின் அருகே அடர்ந்த வனம் இல்லை. விவசாயப் பணிகள் நடைபெறவில்லை. இத்திட்டத்தால் சிறிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஆய்வகம் அமைக்க 26.82.5 ஹெக்டேர் நிலத்தை தமிழக அரசு தந்துள்ளது. இதனால் தனியாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்த வேண்டியதில்லை.

மனு தாரர் கூறுவதுபோல் ஆய்வகம் அமைக்க ஆயிரம் டன் வெடி மருந்துகள் பயன்படுத்தப் போவதில்லை. வெறும் 450 டன் வெடி பொருள் மட்டுமே பயன்படுத்தப்படும். 2.30 லட்சம் கன மீட்டர் அளவுக்குதான் பாறைகள் வெட்டி எடுக்கப்படும். இப்பணிகள் 3 ஆண்டில் முடிவடையும்.

இந்திய நில அதிர்வு பகுதி களின் வரைபடத்தில் ஆய்வகம் அமையும் பகுதி இல்லை. திறந்த வெளியில் உள்ள பிரபஞ்சக் கதிர்களால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆய்வகம் குகைக் குள் அமைக்கப்படுகிறது. நீரோட்டம் பாதிக்கப்படாது, மாசு அடையாது. நீரில் கதிர் வீச்சு ஏற்படாது. ஆய்வகம் அமையும் பாறை கடினத்தன்மை கொண்ட செர்னோகைட் வகையைச் சேர்ந்தது.

இதனால் இந்த வகையிலான பாறையில் நீரோட்டம் இருக்காது. நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு இந்த ஆய்வகம் பெரியளவில் உதவியாக இருக்கும். நியூட்ரினோ ஆய்வகத்தால் பாதிப்பு ஏற்படாது. மனிதகுலத்துக்கு நன்மை ஏற்படுத்தும். எனவே, வைகோ மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மனுவுக்கு தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை செயலர், தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்கவும், மத்திய அரசு மனுவுக்குப் பதில் அளிக்க வைகோவுக்கு அனுமதி வழங்கியும் அடுத்த விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

0 comments: