Wednesday, February 04, 2015

On Wednesday, February 04, 2015 by farook press in ,    
இன்றைய நம் இளைய தலைமுறையினர் நமது வளமான பண்பாட்டு வேர்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். இதுதான் நாம் சந்திக்கும் மிகக் கடுமையான சவால் என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கூறினார்.
12வது திருப்பூர் புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வில், தேசம் போகும் பாதை புதிது..ஆனால்? என்ற தலைப்பில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: இளைஞர்கள், பெண்களின் மூலம்தான் மாற்றங்கள் நிகழ முடியும். ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடியவர்களாக பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த எண்ணங்களும் இல்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கக்கூடிய கூட்டமாக அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். பொதுக்கூட்டம், அறிவுத்தள விவாதம், அரசியல் தளத்தில் பேசுவதைக் கேட்பதற்கு இன்று காதுகள் இல்லை.
நாட்டின் பொருளாதாரக் கொள்கை, கல்விக் கொள்கையை வகுப்பவர்கள்தான் இதற்குக் காரணம். நம் கல்வி அமைப்பு திறனற்ற தொழிலாளர்களை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இளைஞர்களின் கற்பனைகள் அழிக்கப்பட்டுவிட்டன. வெற்றுத் தகவல்அறிவு பெறுவதால் என்ன பயன்? அதை இன்று கணினியிலேயே தேடிக் கொள்ளலாம். ஆனால் கற்பனை வளம் இல்லாத மனிதன் ஆரோக்கியமாக வளர முடியாது. 
வேலையில் இருப்போரும், வேலை இல்லாதவர்களும் என இருதரப்பினருமே பாதுகாப்பற்றவர்களாக உணரும் நிலை தற்போது உள்ளது. வாசிப்பு, பண்பாட்டில் இருந்து இளைய தலைமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் இளைஞர் கூட்டத்தை ஏடிஎம் பணம் வழங்கும் தானியங்கி இயந்திரமாக மாற்றிவிட்டோம். ஒரு தேசமே மாபெரும் பைத்தியக்காரர்கள் விடுதியாக இருக்க முடியுமா? பண்பாட்டு மரபில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பெரும் கூட்டத்தை எளிதில் வெறுப்பை நோக்கி திருப்ப முடியும். அதைத்தான் இன்றைய அரசியல் சூழலில் செய்து கொண்டிருக்கின்றனர். இது அவநம்பிக்கை கொள்வதற்கான விசயம் அல்ல. நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியோடு போராட வேண்டும். இந்த விசயத்தை மாற்ற முன்வர வேண்டும். இவ்வாறு மனுஷ்யபுத்திரன் கூறினார். 
இந்நிகழ்வில், பெரிதினும் பெரிது கேள் என்ற தலைப்பில் கவிஞர் உமா மகேஸ்வரி பேசினார். முன்னதாக பிரஸ் கே.குமாரசாமி தலைமை வகித்தார். என்.மூர்த்தி வரவேற்றார். சாயஆலை அதிபர்கள் சங்கத் தலைவர் எஸ்.நாகராஜ் நீர்மேலாண்மை குறித்துப் பேசினார். கீதாஞ்சலி கோவிந்தப்பன் வாழ்த்தினார். திரளானோர் கலந்து கொண்டனர்.

0 comments: