Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by Unknown in ,    
மதுரை அருகே வாடிப்பட்டி பக்கமுள்ள பொம்மபட்டியை சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி மீனாட்சி. இவருக்கு கடந்த 2013–ம் ஆண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த மறுநாளே அந்த குழந்தை கடத்தப்பட்டது.
இக்குழந்தையை மீட்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கண்டுபிடிக்க முடியாததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 1½ ஆண்டுகளாக தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை திருப்பூரில் ஒரு இடத்தில் வளர்வதாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று ஒரு ஆண் குழந்தையை மீட்டது.
பின்னர் அந்த குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளர்த்த பெண், குழந்தையை பறிகொடுத்த தினகரன், மீனாட்சி தம்பதியினர் ஆகியோரை போலீசார் அழைத்து சென்றனர்.
அதன் பிறகு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் ஆலோசனைபடி சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் நடராஜன் முன்னிலையில் மீட்கப்பட்ட குழந்தை, தினகரன், மீனாட்சி ஆகியோருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
பின்னர் அந்த ரத்தம் சீலிடப்பட்ட உறையில் வைத்து தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்

0 comments: