Saturday, March 28, 2015

On Saturday, March 28, 2015 by Unknown in ,    
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள், சாயக் கழிவுநீரால் மாசுபட்ட நிலத்தடி நீரை எடுத்து வந்து ஆட்சியரிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது:
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையத்தில் இரு பிரிண்டிங் நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. இங்கிருந்து, சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் சாயக் கழிவுநீரால் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனால், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால், ஆழ்துளை கிணறுகளிலும் மாசுபட்ட தண்ணீர் தான் வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் ஏற்கெனவே பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விளைநிலங்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பிரிண்டிங் நிறுவனங்களை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

0 comments: