Thursday, March 12, 2015

On Thursday, March 12, 2015 by farook press in ,    
தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் புதிய தலைமுறை தொலைகாட்சி மீதும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க கலை இரவு நிகழ்ச்சியிலும் தாக்குதல் நடத்திய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை சிஐடியு தமிழ் மாநிலக் குழுக் கூட்டம் துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் வி.குமார், ஆர்.கருமலையான், கே.திருச்செல்வன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மத அடையாளம் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் மாற்றுக் கருத்து மற்றும் நம்பிக்கை கொண்டோரை குறிவைத்து இந்துத்துவ அமைப்பினர் தாக்குகின்றனர். இது இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மதிக்க மறுக்கிற ஜனநாயக விரோத செயலாகும். இதை பாஜக அரசு பகிரங்கமாக கண்டிப்பதற்கு பதிலாக வேடிக்கை பார்க்கிறது. இதை தொடர் தாக்குதலுக்கான சமிக்கையாக கருதி இந்துத்துவ வன்முறையாளர்கள் தொடர் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இதை சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் எழுத்தாளர்கள் பெருமாள்முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரை தாக்கியதும், அவர்களின் எழுத்துரிமையைப் பறிக்கிற செயலிலும் வகுப்புவாத சாதிய சக்திகள் இறங்கினர்.
கடந்த மார்ச் 7ம் தேதி தமுஎகச சங்கத்தின் சார்பில் உடுமலைபேட்டையில் நடந்த கலை இரவு நிகழ்ச்சிகளின் மீது தாக்குதல் தொடுத்து நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி செய்துள்ளனர். மார்ச் 8ம் தேதியன்று ஆயுதங்களுடன் சென்று புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனத்தின் மீது இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீண்டும் 12ம் தேதி அதிகாலை 3 மணியளவில் புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தகைய வன்செயல்கள் கடும் கண்டனத்திற்குரியதாகும். சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு தாக்குதலுக்கு காரணமான இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறது. தொடர் தாக்குதலில் இந்துத்துவ அமைப்பினர் ஈடுபடுவதற்கு காரணம் மாநில அரசு கண்டுகொள்ளாத போக்கே ஆகும் என சிஐடியு குற்றம் சுமத்துகிறது. எனவே தமிழக அரசும், காவல் துறையும் பிரச்சனைகளின் தீவிரத்தன்மையை உணர்ந்து நியாயமான நடவடிக்கை எடுப்பதும், "கலாச்சார காவலர்கள் என தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு அலையும் கும்பலை" கைது செய்யவும், கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிஐடியு மாநிலக்குழுக் கூட்டம் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.
-----------

0 comments: