Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேதி) பொது விசாரணை இயக்கம் நடத்தப்படுகிறது.  இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்டக்குழுவின் சாவித்திரி கூறியுள்ளதாவது: தமிழகத்தில் குடிபோதை கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 44 மாத காலத்தில் மட்டும் 4 ஆயிரத்து 697 பாலியல் வன்குற்றங்கள், 79 ஆயிரத்து 305 கொள்ளைகள், 7 ஆயிரத்து 805 கொலைகள் நடந்துள்ளன. இந்த குற்றங்களுக்கு பின்புலமாக குடிப்பழக்கம் இருந்துள்ளது. அரசு, டாஸ்மாக் மதுபான விற்பனை இலக்கை ஆண்டுக்கு ஆண்டு பல ஆயிரம் கோடியாக அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.26 ஆயிரம் கோடி சாராய விற்பனை மூலம் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. 

13 வயது சிறார்களையும் குடிகாரர்களாக மாற்றும் அரசாக உள்ளது. இந்த நிலையில் மது இல்லாத, குடி இல்லாத சமூகம் வேண்டும் என்பது பல குடும்பங்களின் கனவாக உள்ளது.  இதற்கு முதற் கட்டமாக குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், இந்த பொது விசாரணை இயக்கம் நடத்தப்படுகிறது.  ஏப்ரல் 24ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு அனுப்பர்பாளையம் புதூர் வெங்கடேசா திருமண மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்வில் மாதர் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் முத்துக்கண்ணன், மனநல ஆலோசகர் எம்.வாசுகி, லிட்டில் கிங் டம் நிர்வாகி ஹேமா தேவராஜன், சட்ட உதவி மன்றத் தலைவர் வழக்கறிஞர் வை.ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

மதுபோதை கலாசாரத்தை கட்டுப்படுத்த முதல் கட்டமாக கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடை வீதி, ஆறு, குளம் நீர்நிலைகள், தேசிய, மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றவும், பகல் நேரங்களில் மதுக்கடைகளை மூடவும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யத் தடை விதிக்கவும், அரசே மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தவும் இந்த இயக்கத்தில் வலியுறுத்தப்படும். இவ்வாறு சாவித்திரி கூறியுள்ளார்.

0 comments: