Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
இலங்கையின் வடக்கே கனகராயன்குளம் பகுதியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டிருந்த சிறுமி சரண்யாவின் மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து, வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக அந்த சிறுமியின் சடலம் 38 நாட்களின் பின்னர் இன்று திங்கட்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, மீள் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

 
கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தைச் சேர்ந்த செல்வராசா சரண்யா என்ற 16 வயது பாடசாலை மாணவி பெற்றோரை இழந்து தனது அம்மம்மாவுடன் வசித்து வந்தபோது, சகோதரன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்ற அவர், கடந்த பிப்ரவரி மாதம் திடீர் சுகவீனமடைந்து, மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் திடீரென அங்கு மரணித்தார்.
 
இவருடைய மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக மருத்துவ பரிசோதனை நடத்திய கிளிநொச்சி வைத்தியர், சிறுமி சரண்யா கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததற்கான அடையாளம் அவரது உடலில் காணப்பட்டதாக, தங்களிடம் தெரிவித்ததாகவும், இதனையடுத்தே அவருடைய மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறையிடமும் ஏனைய அதிகாரிகளிடமும் முறையிட்டதாக சிறுமியின் பாட்டி சீதையம்மா மற்றும் கொல்லர்புளியங்குளம் மாதர் அபிவிருத்திச் சங்க முக்கியஸ்தரும் தெரிவித்திருந்தனர்.
 
சிறுமி சரண்யாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டிருந்த போதிலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு பொது அமைப்புக்களும் பெண்கள் உரிமைக்கான அமைப்புக்களும் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே வவுனியா நீதிமன்றம் சிறுமி சரண்யாவின் சடலத்தைத் தோண்டி எடுத்து மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
 
இதனைத் தொடர்ந்து திங்களன்று, வவுனியா மாவட்ட நீதவான் மொகமட் ரிஸ்வான், யாழ் மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் டாக்டர் உருத்திரபதி மயூரகன் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் சிறுமி சரண்யாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. சடலத்தை சிறுமியின் பாட்டி சீதையம்மா மற்றும் சகோதரன் முறையான ஒருவர் ஆகியோர் அடையாளம் காட்டினர். இதனையடுத்து. சடலத்தை கொழும்புக்கு அனுப்பி சட்ட வைத்திய நிபுணரின் மருத்து பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0 comments: