Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
அருப்புக்கோட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 38 மாணவ–மாணவிகள் காயம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் தனியார் மெட்ரிக் உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவ–மாணவிகளை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சொந்தமாக வேன் உள்ளது. இன்று காலை பள்ளி வேன் வழக்கமாக மாணவ–மாணவிகளை அழைத்துவர புறப்பட்டது. வேனை சிவஞானம் என்பவர் ஓட்டினார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பொய்யாங் குளத்துக்கு சென்ற வேன் அங்கிருந்து 70–க்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
நேற்று இரவு அப்பகுதியில் மழை பெய்திருந்ததால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது. எனவே டிரைவர் மெதுவாக வேனை ஓட்டி வந்தார். பொய்யாங்குளம் பகுதியில் உள்ள குறுகிய சாலையில் வந்தபோது ஈரமாக இருந்த மண் சரிந்தது. இதில் வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் உள்ளே இருந்த மாணவ–மாணவிகள் 38–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கூக்குரலிட்ட அவர்களை அப்பகுதியினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தாசில்தார் ரெங்கசாமி மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

0 comments: