Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
விருதுநகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர்-சூலக்கரை இடையே 300 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டது. இவ்வளாகத்தில் அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகமும் இயங்கி வருகிறது. அனைத்து துறைகளிலும் அலுவலர்கள், ஊழியர்கள் என 1,200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
   இவர்கள் எளிதாக வேலை பார்த்துச் செல்லும் வகையில், இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தோர் தங்குவதற்காக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 70 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் பல கோடி ரூபாய் செலவில் கடந்த 1985ல் 745 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
  இக்குடியிருப்பு வளாகங்களில் ஏ மற்றும் பி பிரிவு வீடுகள் அரசு துறை அதிகாரிகளுக்காகவும், சி,டி,இ பிரிவு வீடுகள் ஊழியர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது. இதில், ஒவ்வொரு குடியிருப்பு வளாகமும் தலா 2 தளங்களை கொண்டதாக அமைக்கப்பட்டது.
  இப்பகுதியில் பூங்கா, கலையரங்கம், விளையாட்டு மைதானம், கோயில்கள், குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், ஆழ்குழாய் கிணறுகள், சாலை வசதி, மின்சார வசதி, தொலைத்தொடர்பு வசதி மற்றும் ரேஷன் கடை என அனைத்து வசதிகளும் இருந்தன.
 இங்கு வசிக்கும் அரசு ஊழியர்களுக்கு அவர்களது மாத ஊதியத்தின் அடிப்படையில் குறைந்த அளவே வாடகை நிர்ணயித்து, ஊதியத்திலிருந்தே அத்தொகையும் வசூலிக்கப்பட்டு வந்தது.
  இந்நிலையில்,தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அலுவலர்கள் குடியிருப்புகள் 26 ஆண்டுகளில் பழுதடைந்தது. தற்போது இடிந்து விழும் நிலையில் இருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
   இது குறித்து அரசு ஊழியர் சங்கத்தின் செயலாளர் ச.கண்ணன் கூறுகையில், எல்லா மாவட்டங்களில் அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. அதேபோல், இம்மாவட்டத்திலும் இருந்தன. ஆனால், வீட்டின் மேற்கூரை இடிந்து விழும் நிலையிலும், சிமெண்ட் தளமும் பெயர்ந்தும் இருந்தது. அதோடு, மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு பெண் ஒருவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இதுபோன்ற காரணங்களால் கடந்த 2011ல், இக்குடியிருப்பு வளாகங்கள் குடியிருக்க தகுதியற்றவை என அறிவித்து, அதில் வசித்து வந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குடும்பங்கள் அனைத்தும் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டனர்.
    இதைத் தொடர்நது அலுவலர்கள் குடும்பத்தினர் விருதுநகரில் தங்க வீடு கிடைக்காமல்  அலைந்து வருகின்றனர். பலர் வெளியூர்களில் குடியேறி அங்கிருந்து பேருந்து மற்றும் ரயில்களில் வந்து செல்கின்றனர் என்றார்.
   இது தொடர்பாக விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் கூறுகையில், இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இம்மாவட்டத்தில் அரசு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் தகுதியற்றவையாக இருப்பதை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும் என்பது குறித்து சட்டப்பேரவை கூட்டத்தில் பேசினேன். அதன் அடிப்படையில் இக்கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்றுக் கொண்டு ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். எனவே பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

0 comments: