Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

சூரிய மின்சக்தி பம்பு

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் சூரிய மின்சக்தி நிலையான பேனல் அமைக்கவும், ஆழ்குழாய் கிணற்றில் சோலார் பம்பு செட்டுகள் அமைக்கவும், திறந்தவெளி கிணறு, தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டிகளிலும் சோலார் பம்பு செட்டுகள் அமைக்க மொத்த தொகையில் 80 சதவீதம் மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.

வேளாண்மை பொறியியல் துறை மூலம் அடிப்படை விலையில் 80 சதவீதம் மானியம் போக 20 சதவீத தொகை மற்றும் அதற்கான வரியை விவசாயிகள் செலுத்தினால் போதும். நிலையான பேனல்கள் ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 822 மதிப்பில் அமைக்கப்படும்.

80 சதவீத மானியம்

இதற்கு விவசாயின் பங்களிப்புத்தொகை ரூ.95 ஆயிரத்து 342 மட்டுமே, திறந்தவெளி கிணறுகளில் ரூ.5 லட்சத்து 1 ஆயிரத்து 512 மதிப்பில் சூரிய மின்சக்தி பம்பு செட்டுகள் அமைத்து கொடுக்கப்படுகிறது.

இதற்கான விவசாயியின் பங்களிப்புத்தொகை ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 512 ஆகும். 80 சதவீத மானியாத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்து விசை குழாய் மூலம் நீர்ப்பாசனம் செய்ய தகுதியுள்ள விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையை அணுகி கம்ப்யூட்டர் பட்டா அசல், அடங்கல் பட்டா, விசைக்குழாய் அமையும் இடத்தின் நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, சாதிச்சான்று நகல் (பட்டியல் வகுப்பினர் மட்டும்) ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் சூரிய ஒளி விசைக்குழாயை நீர்ப்பாசனம் செய்வதற்கு மட்டுமே உபயோகம் செய்வேன் என உறுதி அளிக்க வேண்டும்.

எங்கு அணுகுவது?

விருதுநகர் மாவட்டத்தில் சூரிய ஒளிக்கு ஏற்ப தானாக இயங்கும் பேனல்கள் மூலம் 21 விவசாயிகள் ஆழ்குழாய் கிணற்றிலும், 39 விவசாயிகள் திறந்தவெளி கிணற்றிலும், 2 விவசாயிகள் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியிலும் ஆக மொத்தம் 62 விவசாயிகள் சூரியசக்தி பம்பு செட்டுகள் அமைத்துள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையினை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments: