Tuesday, November 24, 2015

On Tuesday, November 24, 2015 by Unknown in , ,    

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என அமைச்சர் சண்முகநாதன் கூறினார். 

இது தாெடர்பாக அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி, அந்தோணியார்புரம், மறவன்மடம், சோரிஸ்புரம், அரசு ஊழியர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி, கயத்தார், ஓட்டப்பிடாரம், மணியாச்சி போன்ற பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியது. கடந்த நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை ஏற்பட்ட கனமழையின் காரணமாக காட்டாற்று வெள்ளமாக உப்பாற்று ஓடை  அருகே உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. 

முதல்வர் உததரவின் பேரில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன். வெள்ள நிவாரண பணி சிறப்பு அலுவலர் குமார் ஜயந்த், மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் ஆகியோர் தொடர்ந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட்டார்கள். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, மீன்வளத்துறை, கடலோர காவல்படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவற்றிற்கு சொந்தமான 16 படகுகளை பயன்படுத்தி பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்றது. 

வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களை 6 முகாம்களில் 13,415 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, பால், ரொட்டி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வெள்ளம் வடியும் வரை தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து தரப்படவேண்டும் என ஆட்சியரிக்கு உத்தரவிட்டுள்ளேன். கனமழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு இன்று மாலைக்குள் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். மின்சாராம் இல்லாத கிராமங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டு அவசர தேவைகள் பூர்த்தி செய்து வரப்படுகிறது.

மின்சார வசதி இல்லாத ஊராட்சிகளில் குடிநீர் திட்டங்கள் ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொதுசுகாதாரத்துறை மூலம் 16 நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தொற்றுநோய்கள் பரவாமல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்த பின்பு பாதிக்கப்பட்ட இழப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும். பொதுப்பணித்துறை மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  உபரி நீர் வெளியேறும் இடங்களில் போர் கால அடிப்படையில் மணல் மூட்டைகள் மூலம் சீரமைக்கும்பணி நடைபெற்று வருகிறது.

மாநகராட்சிப் பகுதிகளில் 54 டீசல் மோட்டார்கள், 17 மின் மோட்டார்கள், 6 ஹிட்டாச்சி இயந்திரங்கள், 12 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் 9 தண்ணீர் உறிஞ்சும் லாரிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள மழை நீரினை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீராக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள நியாயவிலைக் கடைகளிலும் அனைத்து உணவு பொருட்களும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு பொது விநியோகம் திட்டத்தின் கீழ் கூடுதலாக அரிசி மற்றும் மண்ணெண்ணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் குடியிருப்பு பகுதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளம் முழுமையாக வடிய நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் எந்தவித பாதிப்பும் இல்லை. மாவட்டத்தில் நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் நலமுடன் உள்ளனர். 

தூத்துக்குடி பக்கிள் ஓடை ஆங்கிலேயர் காலத்தில் பக்கிள் துறை என்பவரால் கட்டப்பட்டது. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது பக்கிள் ஓடை சீரமைக்கப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு 40அடி அகலமாக இருந்த பக்கிள் ஓடையை அம்மா முதல்வராக இருந்தபோது மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்களால் பக்கிள் ஓடை 20 அடியாக குறைந்துவிட்டது. பக்கிள் ஓடையை மறவன் மடத்திலிருந்து திரேஸ்புரம் வரை அமைத்திருக்க வேண்டும். ஆனால், திரேஸ்புரத்திலிருந்து தொடங்கி 3வது மைல் பகுதியிலேயே நிறுத்திவிட்டனர். திமுக ஆட்சியில் பக்கிள் ஓடையை முழுமையாக சீரமைக்காதால், தண்ணீர் செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு அமைச்சர் கூறினார். 

0 comments: