Monday, November 30, 2015

On Monday, November 30, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக உப்பாற்றில் ஏற்பட்ட தீடிர் வெள்ளம் காரணமாக 10 ஊராட்சிகளிலும், மாநகராட்சிக்கு உட்பட்ட சில புறநகர் பகுதியிலும், குடியிருப்பு பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்தது. 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் 7வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
மேலும், கால்நடைபராமரிப்புத்துறை செயலர் திரு.விஜயகுமார்,இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக ஆணையர் திரு.கோ.பிரகாஷ்,இ.ஆ.ப., ஆகியோர்  தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைதந்து வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
நேற்று (29.11.2015) மாலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் எதிர்வரும் பருவமழையின் காரணமாக பொது மக்கள் பாதுகாப்பு முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் கால்நடைபராமரிப்புத்துறை செயலர் திரு.விஜயகுமார்,இ.ஆ.ப., அவர்கள் பேசும் போது:
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் எதிர்வரும் 2 தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  கடந்த (23.11.2015) அன்று பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திற்கு முக்கிய காரணம் உப்பாற்றில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் உபரி நீரே காரணம்.  இதனால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. உடனடியாக மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, ரொட்டி, பால், பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் சுமார் 3000 நபர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்காலிக முகாமிற்கு வராமல் சமைக்க இயலாமல் வீட்டிலேயே இருப்பவர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. 
மாநகராட்சி பகுதியில் உள்ள அம்பேத்கார் நகர், குருஞ்சி நகர் போன்ற பகுதியில் வெள்ள நீரை முழுமையாக  மின்மோட்டார் மூலம் வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
மேலும், எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டு  மாவட்டம் முழுவதும் 53 தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. அங்கு பொது மக்களுக்கு உணவு சமைக்க தேவையான  அரிசி, பருப்பு, உடைகள், பால் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். ஊராட்சிப் பகுதியில் ஊராட்சி மன்றத்தலைவர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்காலிக முகாம்களில் பொது சுகாதாரத்துறையின் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. அவசரகால மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


0 comments: