Tuesday, December 08, 2015

On Tuesday, December 08, 2015 by Unknown in , ,    

வடகிழக்கு பருவ மழை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் 62 வரவேற்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்ததில், தற்போது 6 வரவேற்பு மையங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 19 பேரூராட்சிகளில் தலா ஒரு வரவேற்பு மையமும், 12 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 2, நகராட்சியில் தலா 2 மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 15 முகாம்கள் ஆக மொத்தம் 62 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர கடலோர கிராமங்களான காயல்பட்டிணம், சிலுவைப்பட்டி, தருவைக்குளம், வேம்பார் மற்றும் கீழத்திருச்செந்தூர் ஆகிய 5 கிராமங்களில் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும் தற்பொழுது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவும் பெரியதாழை, புன்னக்காயல், வீரபாண்டியன்பட்டிணம், குலசேகரன்பட்டிணம், மணப்பாடு, பழையகாயல், பட்டிணமருதூர், தருவைக்குளம், வேப்பலோடை, கீழஅரசடி, வைப்பார், பெரியசாமிபுரம், பச்சையாபுரம், முள்ளக்காடு (பகுதி 1) மற்றும் (பகுதி 2), தூத்துக்குடி மற்றும் மாப்பிள்ளையூரணி ஆகிய 17 கடற்கரை கிராமங்களில் புதியதாக வரவேற்பு மையங்கள் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு 08.12.2015 முதல் 22 கடலோர கிராமங்களிலும் அவை செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள வரவேற்பு மையங்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள், அவர்களது தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மாவட்ட இணையதள  பகுதியிலும் முகநூலிலும் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 10.12.2015 மற்றும் 11.12.2015 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலான கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்குமென்று தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு அவ்வாறு கனமழை பெய்து வெள்ளம் சூழக்கூடிய நேரங்களில், பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள வரவேற்பு மையங்களை பயன்படுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இம்மையங்களில் குறைந்தது 1,000 நபர்களுக்கு உணவு சமைத்து வழங்கவும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, ஜெனரேட்டர் வசதி ஆகியனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மையங்களை பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மீனவர்கள் மீன்வளத்துறை மூலம் அவ்வப்போது அறிவுறுத்தப்படும் எச்சரிக்கை அறிவிப்பின்படி செயல்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவசர காலங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 ஐ பயன்படுத்தி தகவல் தெரிவிக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

0 comments: