Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் நடந்தது. நேற்று இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் அந்தந்த இடங்களில் இருந்து வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.நேற்று மதியம் ஸ்ரீநகர் 5–வது வீதியில் 50–க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கைகளில் சிறிய விநாயகர் சிலைகளை ஏந்தியபடி ஊர்வலமாக செல்ல தயாரானார்கள். அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் பாதுகாப்பு காரணம் கருதி ஊர்வலமாக செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த இடத்திலேயே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெண்கள் ஊர்வலம்

இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் திஷா மிட்டல், உதவி கமிஷனர் தங்கவேல் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் பெண்கள் மட்டும் அந்த வீதியில் ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து அந்த பகுதி பெண்கள் மகிழ்ச்சியுடன் கைகளில் விநாயகர் சிலைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.திருப்பூர் தெற்கு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் தாராபுரம் ரோடு அரசு ஆஸ்பத்திரி முன் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ராகவன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.காவிக்கொடி அணிவகுப்பு

ஊர்வலத்தில் பேண்டு வாத்திய கலைஞர்கள் முன்செல்ல, இந்து முன்னணி தொண்டர்கள் காவிக்கொடி ஏந்தி அணிவகுத்து சென்றனர். அதைத்தொடர்ந்து சரஸ்வதி, லட்சுமி, பெருமாள் வேடமணிந்தவர்கள் சென்றனர். பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.ஊர்வலம் கரட்டாங்காடு, பெரிச்சிப்பாளையம், திரு.வி.க.நகர், வெள்ளியங்காடு நால்ரோடு, தென்னம்பாளையம், பழைய பஸ் நிலையம், பூக்கடை முக்கு, டைமண்ட் தியேட்டர் வழியாக ஆலங்காடு பகுதியை வந்தடைந்தது.விநாயகர் சிலைகள்

திருப்பூர் வடக்கு பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 450–க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு திருப்பூர் புதிய பஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. புதிய பஸ் நிலையத்தின் உள்பகுதியில் விநாயகர் சிலைகள் ஏற்றப்பட்ட வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டன.மாலை 5.30 மணிக்கு விசர்ஜன ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செந்தில் தலைமை தாங்கினார். கதிரவன் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் பேசினார்கள். முதல் விநாயகருக்கு சந்திரசேகர் பூஜை செய்தார். குமரன் டிம்பர்ஸ் ஈஸ்வரன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.பிரமாண்ட சிலைகள்

நிகழ்ச்சியில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் சேவுகன், மாவட்ட துணைத்தலைவர்கள் கதிர், சாமுண்டி, பி.வி.எஸ். மாவட்ட தலைவர் சருவமலை, மாவட்ட செயலாளர் மோகனசுந்தரம், மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், கொ.ம.தே.க. மாநகர் மாவட்ட செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.ஊர்வலத்தின் தொடக்கத்தில் பேண்டு வாத்திய கலைஞர்கள் முன்செல்ல, அதைத்தொடர்ந்து பாரத அன்னை, வீரசிவாஜி, விவேகானந்தர், ராம.கோபாலன், தாணுலிங்க நாடார், வெள்ளையன் ஆகியோரின் உருவ படம் கொண்ட அலங்கார வாகனங்கள் வரிசையாக செல்ல, காவிக்கொடி ஏந்திய இந்து முன்னணி தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர். அதன்பின் சிவன், பார்வதி, நாரதர் வேடமணிந்த கலைஞர்கள் நடனமாடி சென்றார்கள். அதற்கு பின்னால் சிங்கம், புலி, சிவன் என பிரமாண்ட சிலைகளுடன் கூடிய வாகனங்கள் சென்றன. அதன் பின்னர் விநாயகர் சிலைகளை ஏற்றிய வாகனங்கள் அணிவகுத்து சென்றன. ஊர்வலம் 60 அடி ரோடு, எம்.எஸ்.நகர், கொங்கு மெயின் ரோடு, பிரிட்ஜ்வே காலனி, மில்லர் பஸ் நிறுத்தம், மேம்பாலம், நடராஜா தியேட்டர் வழியாக ஆலாங்காடு பகுதியை வந்தடைந்தது.சாமளாபுரம் குளம்இதுபோல் திருப்பூர் மேற்கு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் மங்கலம் ரோடு செல்லம் நகர் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டன. ஊர்வலத்தை மாநகர் மாவட்ட தலைவர் அண்ணாத்துரை கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாவட்ட செயலாளர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் கே.டி.சி. பள்ளி வீதி, வேப்பங்காடு பங்களா, மேற்கு பிள்ளையார் கோவில், ஏ.பி.டி. ரோடு வழியாக ஆலங்காடு பகுதியை வந்தடைந்தது.திருப்பூர் மாநகரில் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய 3 பகுதிகளில் இருந்து இந்து முன்னணி சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்வதற்காக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. ஆலங்காடு பகுதிக்கு வந்து சேர்ந்ததும் அங்கு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டம் முடிந்ததும் இரவு அங்கிருந்து சாமளாபுரம் குளத்துக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் தலைமையில் 800–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.ஊர்வலத்தை ஆர்வத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள்இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் ரோட்டோரம் நின்று பார்வையிட்டனர். சிலர் வீட்டு மாடியிலும், உயரமான கட்டிடங்கள் மீதும் ஏறி நின்று ஊர்வலத்தை கண்டுகளித்தனர்.பேண்டு வாத்திய கலைஞர்கள் நடனமாடியபடி மேளம் அடித்து சென்றது, கேரள பாரம்பரிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சி, பிரமாண்ட சாமி சிலைகள், சிங்கம், புலி பொம்மைகள் ஊர்வலமாக செல்வதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டார்கள்.மாநகரில் போக்குவரத்து மாற்றம்இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்ததையொட்டி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. திருப்பூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் மாநகரின் மையப்பகுதிகளில் பஸ்கள் வராத அளவுக்கு ரிங் ரோடு வழியாக பஸ்கள் திருப்பி விடப்பட்டன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் அதிகப்படியான போலீசார், டிராபிக் வார்டன்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்

0 comments: