Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in ,    





விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் காரணமாக நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதையொட்டி சாலைமறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2 ஆயிரத்து 143 பேர் கைது செய்யப்பட்டனர்.
முழு அடைப்பு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகள் சார்பில் நேற்று திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பங்கேற்றனர்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அவினாசி ரோடு, குமரன் ரோடு, காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு உள்பட மாநகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடைகள் திறந்து இருந்தன.
கடைகள் மூடப்பட்டன
ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மளிகை மொத்த வியாபார கடைகள், அரிசிக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. மாநகரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். வெளியூரில் இருந்து நேற்று திருப்பூர் வந்தவர்கள் சாப்பிடுவதற்கும், டீக்குடிப்பதற்கும் கூட அவதிப்பட்டனர்.
தள்ளுவண்டி கடைகளில் தயிர் சாதம், தக்காளி சாதம் வைத்து மாநகரில் ஆங்காங்கே வீதிகளில் வைத்து விற்பனை செய்தனர். அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதுபோல் சைக்கிளில் கேன்கள் வைத்து டீ விற்பனை செய்து வந்தனர். தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வீடுகள் மற்றும் அறைகளில் முடங்கி கிடந்தனர்.
உழவர் சந்தைகள்
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு தினமும் 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 250 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இவற்றை மளிகை கடைக்காரர்கள், பொதுமக்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் வந்து வாங்கி செல்வார்கள். முழு அடைப்பு போராட்டத்துக்கு திருப்பூரில் உள்ள விவசாயிகள் தங்களது ஆதரவை தெரிவித்து இருந்தனர். நேற்று விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வராததால் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைகளுக்கும் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வராததால் பொதுமக்கள் காய்கறி வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருப்பூர் பழைய பஸ்நிலையம் எதிரில் உள்ள குமரன் தினசரி மார்க்கெட்டிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தியேட்டர்களில் காட்சிகள் ரத்து
திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய்கிழமைதோறும் சோளம், கம்பு, மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட விவசாய விளை பொருட்களுக்கான விற்பனை நடைபெறுவது வழக்கம். இங்கு பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சந்தை நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் யாரும் இல்லாமல் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றபோதிலும், திருப்பூரில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. சில தனியார் பஸ்கள் மட்டும் ஓடவில்லை. மினிபஸ்கள் பெரும்பாலும் இயங்கவில்லை. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் வேன், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதன்காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் அவினாசி ரோடு, குமரன் ரோடு நேற்று வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் உள்ள தியேட்டர்களில் நேற்று காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதுபோல் அவினாசி, ஊத்துக்குளி, குன்னத்தூர், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் பகுதிகளிலும் அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.
சாலைமறியல்
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்துக்கட்சிகள் சார்பில் திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் முன் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காமராஜ், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேகர், சி.ஐ.டி.யு. சார்பில் ரங்கராஜ், எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி. சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் பெரியார், அண்ணா சிலை முன்பிருந்து காலை 10 மணி அளவில் மறியல் போராட்டம் நடத்த தபால் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றார்கள். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து தபால் அலுவலகம் அருகே உள்ள ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாக டவுன்ஹால், ரெயில்வே மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் திஷா மிட்டல் தலைமையிலான போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 300 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
2,143 பேர் கைது
இதேபோல் மாவட்டத்தில் 30 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து, தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன் உள்பட 1,843 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 41 பெண்கள் அடங்குவார்கள். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 2 ஆயிரத்து 143 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சித்திரைவேல், திருப்பூர் மாவட்ட செயலாளர் தங்கராஜ், பொருளாளர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் வியாபாரிகள் சங்க தலைவர் ரத்னா மனோகர், தி திருப்பூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் குட்டி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டன

0 comments: