Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ‘லிப்ட்’ நடுவழியில் நின்றது. ஊழியர்கள் 2 பேர் சிக்கி தவித்தனர்.

மாநகராட்சி அலுவலகம்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தின் கட்டிட அமைப்பு தரை தளம், முதல் தளம், 2-வது தளம் மற்றும் அதற்கு மேல் மாடி என உள்ளது. இதில் தரைதளத்தில் இருந்து முதல் தளம், 2-வது தளத்திற்கு செல்வதற்கு ‘லிப்ட்’ வசதி உள்ளது. முதல் தளத்தில் மேயரின் அறையும், மாநகராட்சி கூட்டரங்கம் உள்பட துறை அதிகாரிகளின் அலுவலகம், 2-வது தளத்தில் ஆணையரின் அறை உள்பட அதிகாரிகளின் அறை அலுவலகம் உள்ளது.

தரைதளத்திலும் முக்கிய அதிகாரிகளின் அறைகள் உள்ளன. தரைதளத்தில் இருந்து முதல் தளம் மற்றும் 2-வது தளத்திற்கு செல்ல மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ‘லிப்ட்’ வசதியை பயன்படுத்துவது உண்டு. சிலர் படிக்கட்டுகள் வழியாகவும் செல்வார்கள்.

‘லிப்ட்’ நடுவழியில் நின்றது

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10 மணிக்கு மேல் ‘லிப்ட்’ தரைதளத்தில் இருந்து 2-வது தளத்திற்கு சென்ற போது திடீரென நடு வழியில் நின்றது. அதன் உள்ளே லிப்ட்டை இயக்கும் ஊழியர் குமாரும், மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவரும் என 2 பேர் இருந்தனர். அவர்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு ‘லிப்ட்’ நின்றது குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சக ஊழியர்கள் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரித்தனர். இதில் மின் தடை ஏற்பட்டதால் ‘லிப்ட்’ நடுவழியில் நின்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஜெனரேட்டரை உடனடியாக இயக்கினர். அதன்பின் மின்சாரம் வந்ததும் ‘லிப்ட்’ இயங்கியது. சுமார் 15 நிமிடங்கள் லிப்டில் 2 பேரும் தவித்தப்படி இருந்தனர். லிப்ட் இயங்கி 2-வது தளத்திற்கு வந்ததும், அதில் இருந்து வெளியே வந்ததும் 2 பேர் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் மாநகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
On Thursday, September 18, 2014 by farook press in ,    

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் திடீர் என வெறி பிடித்தவர் போல் ஓடி ஒரு நோயாளியை கடித்தார். இதனால் மற்ற நோயாளிகள் அலறி அடித்து ஓடினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்கத்தா வாலிபர்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சலீம் (வயது35). இவர் கரூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து கொசு வலை வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் அவரை ஒரு வெறி நாய் கடித்தது. இதனால் பாதிக்கப்பட்ட சலீம் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் நேற்று மதியம் ஒரு மணி அளவில் சலீமை அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

ஜன்னலை உடைத்தார் 

 மாலை 4 மணி அளவில் திடீர் என அவர் அறையை விட்டு வெளியே வந்தார். மனைவி மற்றும் மைத்துனருடன் பேசினார். அவரது பேச்சு மற்றும் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் அறையில் தள்ளி பூட்டு போட்டு பூட்டினார்கள். இந்நிலையில் மாலை 6 மணி அளவில் சலீம் திடீர் என அந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே குதித்தார். அவர் உடலில் துணி எதுவும் இன்றி நிர்வாணமாக ஓடினார். நாய் குரைப்பது போல் சத்தம் போட்டுக்கொண்டே ஆவேசமாக ஓடி வந்தார். அப்போது எதிரே ஒரு அறையில் இருந்த நோயாளிகள் கிரில் கேட் கதவை இழுத்து சாத்தினார்கள். அந்த கதவை அசைத்து பார்த்து விட்டு திறக்க முடியாத சலீம் பின்னர் இன்னொரு அறையை பார்த்து ஓடினார்.

நோயாளியை கடித்தார் 
சலீம் வேகமாக ஓடி வருவதை பார்த்த நர்சுகள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஓடிப்போய் தங்களது அறையில் கதவை சாத்திக்கொண்டார்கள். அப்போது படுக்கையில் இருந்த ஒரு நோயாளியின் இடது தொடையில் சலீம் கடித்தார். கடிபட்டவரின் பெயர் அர்ஜுனன் (வயது30) புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பக்கம் உள்ள விழாப்பட்டியை சேர்ந்த இவர் ஏற்கனவே விபத்தில் காயம் அடைந்ததால் காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். சலீம் கடித்ததை பார்த்ததும் அந்த அறையில் இருந்த மற்ற நோயாளிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்.

ஒரு மணி நேரம் அட்டகாசம் 

சலீம் வெறி பிடித்தவர் போல் ஓடி எல்லோரையும் கடிக்க முயன்றதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் அவரது அட்டகாசம் நீடித்தது. ஒரு வழியாக மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் சேர்ந்து சலீமை பிடித்து கைகளை கட்டி ஒரு தனியறையில் அடைத்தனர். அந்த அறையை சுற்றி இருந்த படுக்கைகளில் இருந்த நோயாளிகள் அனைவரும் மாடி பகுதிக்கு உடனடியாக மாற்றப்பட்டனர். ஆனாலும் சில நோயாளிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி மறியல் செய்வதற்காக மருத்துவமனையின் வெளி பகுதிக்கு வந்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனை போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 36). இவர் கடம்பத்தூர் பஜார் பகுதியில் தள்ளுவண்டியில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் முத்துராஜின் கடைக்கு வந்த கடம்பத்தூரை சேர்ந்த தன்ராஜ் (37) என்பவர் தனக்கு பானிபூரியை ஓசியில் தருமாறு கேட்டார். அதற்கு முத்துராஜ் மறுத்து விட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர் முத்துராஜை தாக்கி கடையில் உள்ள பொருட்களை கீழே கொட்டி நாசம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து முத்துராஜ் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஊத்துக்கோட்டை அருகே கோவிலில் இருந்த கோபுர கலசங்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
கோபுர கலசங்கள் திருட்டு
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் கிராம எல்லையில் ஆரணி ஆற்றங்கரையில் குமாரலிங்கேஸ்வரர் உடனுறை ராஜேஸ்வரி கோவில் உள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலில் ரமேஷ் என்பவர் பூசாரியாக உள்ளார். ஒரு கால பூஜை நடைபெறும் இந்த கோவிலை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வந்தனர். கோவில் கோபுரங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட 2 பஞ்சலோக கலசங்கள் இருந்தன. இந்த நிலையில் பூசாரி சுரேஷ் நேற்று காலை கோவிலை திறக்க சென்றார்.
அப்போது கோபுரங்கள் மீது இருந்த 5 அடி உயரம் மற்றும் 3 அடி உயரம் கொண்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 பஞ்சலோக கலசங்களை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர்.
போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி சுரேஷ் இது குறித்து ஊர் பெரிவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள டேப் ரிக்கார்டர் திருடிச் சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கண்டலேறு அணையில் நீர் மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.
நதி நீர் பங்கீட்டு திட்டம்கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த மாதம் 3– ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 100 கனஅடியாக வந்தது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டது. சராசரியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. நேற்று மாலை தண்ணீர் மட்டம் 23.62 அடியாக பதிவானது.
ஏரிக்கு வினாடிக்கு 237 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் கிருஷ்ணா நதி நீர் 112 கனஅடியாகவும், மழை நீர் 125 அடியாக ஆக மொத்தம் 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் 658 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
தண்ணீர் நிறுத்தம்கடந்த மாதம் 3–ந் தேதி தண்ணீர் மட்டம் 17.22 அடியாகவும், 76 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் தான் இருப்பு இருந்தது என்பது குறிப்பிடதக்கது. கடந்த மாதம் 3–ந் தேதியில் இருந்து நேற்று மாலை வரை 1.572 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 461 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நேற்று முன்தினம் மாலை முதல் நிறுத்தப்பட்டது.
இதனால் சென்னையில் குடிநீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருப்பூர் பகுதியில் வழிபறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை 15.வேலம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வழிபறி கொள்ளை
திருப்பூரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் பெரியார் காலனி பகுதியில் பிரிண்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ராஜேஸ் கண்ணாவுடன் பணம் வசூல் செய்வதற்காக 15.வேலம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சம்பத்குமார் மற்றும் ராஜேஸ் கண்ணா ஆகியோரை வழிமறித்து அரிவாளை காட்டி பணத்தை கொடுக்கும் படி மிரட்டி உள்ளனர். மேலும் சம்பத்குமாரிடம் இருந்த ரூ.500–ஐயும், செல்போனையும் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓட முயன்ற போது அக்கம்பக்கத்தினர் கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக 15.வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
5 பேர் கைது
விசாரணையில் அவர்கள், திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த அரசு என்பவரின் மகன் வினோத்(வயது 23), கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கெவின் பிரமீஸ்(38), போயம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆதிராஜ் (25), பி.என்.ரோடு பகுதியை சேர்ந்த சர்புதீன்(26), வளையங்காடு பகுதியை சேர்ந்த பாலகணேஷ்(26) என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மொபைல் மற்றும் கிரிக்கெட் மட்டை திருடிய வழக்கிலும், திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் மற்றும் சென்ரல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதன்பேரில் நேற்று முன்தினம் இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
அண்ணா பிறந்தநாளையொட்டி நடந்த சைக்கிள் போட்டியில் திருவள்ளுவர் அரசுப்பள்ளி மாணவ–மாணவிகள் பரிசுகளை பெற்றனர்.
அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு சார்பில் முன்னாள் முதல்–அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 106–வது பிறந்தநாளை முன்னிட்டு 2014–2015–ம் ஆண்டிற்கான சைக்கிள் போட்டி 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
போட்டிக்கு அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சைக்கிள் போட்டியை தொழில் அதிபர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் இராமலிங்கம் வரவேற்று பேசினார். போட்டியில் 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களும், 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் உள்பட 300–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்கள்
இதில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளின் பெயர் வருமாறு:–
15 கிலோமீட்டர் தூரத்திற்கான 13 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷ்குமார் முதல் இடத்தையும், சூரியபிரகாஷ் 2–ம் இடத்தையும், ஜெயக்குமார் 3–ம் இடத்தையும் பிடித்தனர். 20 கிலோ மீட்டர் தூரத்திற்கான 15 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களான ஆகாஷ் முதலிடத்தையும், மணிகண்டன் 2–ம் இடத்தையும், கார்த்திக் 3–ம் இடத்தையும் பெற்றனர். 20 கிலோ மீட்டர் தூரத்திற்கான 17 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் நவீன்குமார் முதல் இடத்தையும், திருப்பூர் சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் நவநீதகிருஷ்ணன் 2–ம் இடத்தையும், திருப்பூர் சின்னச்சாமியம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திகேயன் 3–ம் இடத்தையும் பிடித்தனர்.
மாணவிகள்
10 கிலோமீட்டர் தூரத்திற்கான 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளான சவும்யா, சபீனா, தாரணி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். 15 கிலோமீட்டர் தூரத்திற்கான 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா முதல் இடத்தையும், மைக்ரோகிட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிதர்ஷினி 2–ம் இடத்தையும், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா 3–ம் இடத்தையும் பிடித்தனர். 15 கிலோமீட்டர் தூரத்திற்கான 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளான ரம்யா, சாந்தி, பிரியதர்ஷினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
பரிசு
இதைதொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் முன்னாள் சேர்மன் கிருஷ்ணன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசும், முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ்களையும் வழங்கினார். முடிவில் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுனர் பிரபு நன்றி கூறினார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. 2–ம் மண்டல பாசனத்திற்கு பிரதான கால்வாயில் கடந்த 7–ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனையடுத்து தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் உடுமலை அருகே பிரதான கால்வாயில் பூலாங்கிணறு கிளை வாய்க்கால் ஷட்டர் அருகே இருந்து சர்க்கார்புதூர் கிராமத்தை சேர்ந்த கஞ்சிமலைக்கவுண்டர் மற்றும் அவரது மகன்கள் ராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்திற்கு 4 பைப்லைன் மூலம் தண்ணீர் திருடியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து குழாய்கள் உடனடியாக உடைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று உடுமலை தாசில்தார் சைபூதின் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பூபதி, நிலவருவாய் ஆய்வாளர் சிவனேசன், கிராம நிர்வாக அலுவலர் பால்வாசகம், கிராமஉதவியாளர், பி.ஏ.பி. லஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தணிக்கை செய்தனர். மேலும் இதுகுறித்து தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையினால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு அதிக சேதம் உண்டானது. அதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இதை தொடர்ந்து காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்கும்படி பிரதமர் மோடி இந்திய மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதை தொடர்ந்து காங்கயம் ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் காங்கயம் வாரச்சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களிடம் நிதி திரட்டினர். இதில் பள்ளியின் வரலாறு ஆசிரியை ஏ.சின்னம்மாள் தலைமையில் ஆசிரியர்கள் யசோதா, சிவகுருநாதன் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.