Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
மதுரை மாநகராட்சி மக்களுக்கு 24 மணிநேரம் குடிநீர் கிடைக்க திட்டம்: மேயர் ராஜன்செல்லப்பா அறிவிப்புமதுரை மாநகராட்சி பகுதி மக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்க புதிய திட்டம் தொடங்கப்படும் என மேயர் ராஜன் செல்லப்பா தனது சுதந்திர தின உரையில் கூறினார்.
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் 68–வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் ராஜன்செல்லப்பா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் 10, 12 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ரொக்கப்பரிசும், சிறப்பாக பணியாற்றிய 250 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் களையும் மேயர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாநகராட்சி பள்ளி மாணவ– மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் மேயர் ராஜன்செல்லப்பா சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
மதுரை மாநகராட்சி சார்பில் சுதந்திர தினவிழாவை கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் முதல்வர் அம்மாவுக்கு நிகரான ஒரு தலைவரை தமிழகம் இதுவரை கண்டதில்லை. இனிமேல் காணப்போவதும் இல்லை. இதுதான் வரலாற்று உண்மை.
முதல்வர் அம்மாவின் விடா முயற்சியால் பெரியாறு அணையில் 142 அடி நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்க்கப்பட்டது. மேலும் மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிட கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் அம்மாவின் புகழ் தமிழக வரலாற்றில் நிலைத்து நிற்கும். முதல்வர் அம்மா வின் நல்லாட்சியில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.
மதுரை மாநகராட்சியில் கடுமையான வறட்சி ஏற்பட்டபோதும் மக்களுக்கு தேவையான குடிநீரை மாநகராட்சி நிர்வாகம் வழங்க தவறவில்லை. ரூ.34 கோடி செலவில் 500 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது. இது தவிர லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
நடப்பாண்டில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு திட்ட நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி முழுமைக்கும் குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைத்திட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதேபோல் மாநகராட்சி பகுதிகளில் புதிய சாலைகள் பல்வேறு இடங்களில் போடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் ரூ.19 கோடி செலவில் 4 ஆயிரம் புதிய மின் விளக்குகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரப்பாளையம் பஸ் நிலையத்தை விளாங்குடிக்கு மாற்றிட அரசின் அனுமதி பெற்று விரைவில் பணிகள் தொடங்கப்படும். மதுரை மாநகராட்சியில் அம்மாவின் ஆணைப்பெற்று அனைத்து பகுதிகளிலும் சுத்தமான குடிநீர் விநியோகம், மாசில்லா சாலை அமைக்கவும், சாலையில் மின் விளக்குகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து வசதிகளோடும் கூடிய ஆடிட்டோரியம் அமைக்கவும், மாநகராட்சி சார்பில் உலகத்தரம் வாய்ந்த பெரிய விளையாட்டு மைதானம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் தென் பகுதியில் நீச்சல் குளம் கட்டவும், மாநகராட்சியே நிர்வகிக்கும் வகையில் தொழிற்கல்வி பள்ளி (ஐ.டி.ஐ), கலை அறிவியல் கல்லூரி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வைகை கரையோரம் சாலைகளை சீர்படுத்தி அழகுப்படுத்திடவும், நடுத்தர மற்றும் அனைத்து தரப்பு மக்களின் பொழுது போக்குக்காக அறிவியல் சார்ந்த செய்திகளை அறிந்திடவும் வகையில் நிரந்தர கண்காட்சியம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மக்கள் நலப்பணிகள் முதல்வரின் அனுமதி பெற்று விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: