Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
மதுரையில் நடந்த சுதந்திர தினவிழாவில் 266 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.
நாட்டின் 68–வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் காலை 9 மணி அளவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் சுப்பிரமணியன் 266 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாவட்ட அளவில் பல்வேறு துறை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வீர, தீர செயல்கள் புரிந்த போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
100–க்கும் மேற்பட்ட தியாகிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் சால்வை அணிவித்து கவுரவித்தார். இதனை தொடர்ந்து மாணவ– மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு வண்ணங்களில் உடை அணிந்து சுதந்திர தின பாடல்களுக்கு நடனமாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிற்றரசு, போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார் சிங், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி, போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி, போலீஸ் இணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தை யொட்டி மதுரையில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மதுரையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்பு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். செந்தமிழ் கல்லூரியில் செயலாளர் கோச்சடை குருசாமி கொடியேற்றி வைத்தார்.
பரவை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ராஜா தேசியக் கொடி ஏற்றினார்.

மதுரை: சுதந்திர தினவிழாவில் 266 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் வழங்கினார்

0 comments: