Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞருக்கு இரண்டு மணி நேரம் வாதிடுவதற்கு அனுமதி அளித்தும் ஆஜராகாததால் கோபம் அடைந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பு தேதியை அறிவித்து விடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இந்த நிலையில் சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் நேற்று தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார். அவர் மொத்தம் 8 நாட்கள் வாதிட்டு தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.

இதையடுத்து அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரின் இறுதி வாதமும் முடிவடைந்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மொத்தம் 42 நாட்கள் இறுதி வாதம் நடைபெற்று உள்ளது. இதில் ஜெயலலிதா சார்பில் 25 நாட்களும், சசிகலா சார்பில் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரது சார்பில் 8 நாட்களும் இறுதி வாதம் நடந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில தகவல்களை எடுத்து வைத்து வாதிட தனக்கு கூடுதலாக 2 மணி நேரம் வாய்ப்பு வழங்குமாறு ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமார், நீதிபதியிடம் முறையிட்டார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று வாதிடுமாறு அவருக்கு அனுமதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் தனக்கு மேலும் 2 நாட்கள் ஒதுக்குமாறு கேட்டார். இதையடுத்து, அடுத்த மாதம் 1, 2ஆம் தேதிகளில் அவர் வாதிட நீதிபதி அனுமதி அளித்தார்.

இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடாமல் கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். அங்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வழக்கிலும், சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையில் கூட்டுச்சதி மற்றும் கூட்டுச்சதிக்கு தூண்டுதல் என்ற வார்த்தையை நீக்கக் கோரி ஜெயலலிதா தொடர்ந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதனால், வழக்கறிஞர் குமார் அங்கு சென்று விட்டார்.

இதனால், கோபம் அடைந்த நீதிபதி, மாலை 5 மணி வரை நீதிமன்றத்தில் இருப்பேன். அதற்குள் குற்றம்சாட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட வேண்டும். இல்லையென்றால் வழக்கில் இறுதிவாதம் முடிவடைந்து விட்டதாக கூறிவிட்டு தீர்ப்பு தேதியையும் அறிவித்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

நீதிபதி நீதிமன்றத்திலேயே காத்திருப்பதால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments: