Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
கண் சிகிச்சைக்கு மதுரைக்கு வந்த நைஜீரிய நாட்டுப் பெண் அரசு மருத்துவமனையில் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுளளார். அவருக்கு எபோலா  பாதிப்புள்ளதா எனக் கண்காணிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறினர்.
  ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது எபோலா வைரஸ் பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் விடுத்த எபோலா எச்சரிக்கையை அடுத்து, ஆப்பிரிக்காவிலிருந்து நம் நாட்டுக்கு வருவோரை எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியும் சோதனைக்கு உள்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  மதுரை அரசு மருத்துவமனையில் எபோலா பாதிப்புக்கு உள்ளானவர்களைப் பரிசோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் 4 படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது.
  இந்த நிலையில், நைஜீரியா நாட்டிலிருந்து மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்கு சுமார் 39 வயது மதிக்கத்தக்க பெண் வந்துள்ளார்.
 அப் பெண்ணுக்கு தொண்டையில் வலி, தலை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளன. இதையடுத்து, அவரை எபோலா பரிசோதனைக்கு உள்படுத்துவது அவசியம் என மருத்துவர்கள் கருதியுள்ளனர்.   இதையடுத்து அவரிடம் கேட்டபோது, அவர் தனது மருத்துவ ஆவணங்களைக் காட்டியுள்ளார். அதில் அவர் ஏற்கெனவே எச்ஐவி பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.
  இதையடுத்து, அப்பெண் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.  அங்கு ஏஆர்டி சிகிச்சைப் பிரிவில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
  அதன் பின்னர், அவர் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை மாவட்ட மலேரியா அதிகாரி உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.
 நைஜீரியப் பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, அப் பெண்ணுக்கு எபோலா பாதிப்பில்லை. ஆனாலும், எச்ஐவி பாதிப்புள்ளதாகக் கூறப்படுவதால், தனிமைப்படுத்தி எபோலா உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது என்றனர்.

0 comments: