Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் தர்மாபுரம் அருகே உள்ள கன்னாம்பிவிளையை சேர்ந்தவர் செல்லம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
கன்னாம்பிவிளையில் உள்ள எனக்கு சொந்தமான வீட்டை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து கொண்டனர். அவர்கள், அந்த வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்து விட்டனர். நாங்கள் வீடு இல்லாமல் நடுத்தெருவில் தவித்து வருகிறோம். நாங்கள் அந்த வீட்டில் குடியிருக்கவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தர விட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் டி.சரவணன், ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐகோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்ட பின்பு வீட்டை ஆக்கிரமித்துள்ளவர்கள் போலீசாருடன் சென்று வீட்டை இடித்து விட்டனர் என்று கூறினார்.
அப்போது நீதிபதி, போலீசார் தனியாருக்கு சொந்தமான வீட்டை இடிக்க பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம் என்று அரசு வக்கீலை பார்த்து கேள்வி எழுப்பினார். அதன்பின்பு, கோர்ட்டு உத்தரவிட்டபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜராகி உள்ளாரா என்று கேட்டார். அப்போது தான், இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ‘பிடிவாரண்டு‘ பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இந்த பிடிவாரண்டு உத்தரவை செயல்படுத்தி இன்ஸ்பெக்டரை வருகிற 11–ந்தேதி ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.