Tuesday, August 19, 2014

On Tuesday, August 19, 2014 by farook press in , ,    
சென்னையில் முதியோர்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நிருபர்களிடம் இதுதொடர்பாக அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

சென்னை நகரில் வீடுகளில் தனியாக வசித்த முதியோர்கள் கொலை செய்யப்பட்ட சில சம்பவங்கள் நடந்தன. முதியோர்களை அவர்களது உறவினர்களே, எமன்களாக மாறி தீர்த்துக்கட்டிவிடுகிறார்கள். இதுபோல நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் தெரிந்தவர்களும் கொலைகாரர்களாக மாறினால், போலீசார் அதை எப்படி தடுத்து நிறுத்துவது, என்பது யோசிக்க வேண்டியதாக உள்ளது. 
இருந்தாலும், வீடுகளில் தனியாக வாழும் முதியோர்களின் பாதுகாப்புக்கு என்ன செய்வது என்று தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசித்து சில சிறப்பு திட்டங்களை இப்போது கொண்டு வந்துள்ளோம். கடந்த நான்கைந்து நாட்களாக சென்னை நகரில் வீடுகளில் தனியாக வாழும் முதியோர்களை கணக்கெடுத்தோம். இதுவரை நடந்த கணக்கெடுப்பில் 8,965 முதியோர்கள் தனியாக வாழ்வதாக கணக்கெடுத்துள்ளோம். தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. 
இந்த முதியோர்களை பாதுகாப்பதற்கும், சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக கண்டு தெரிந்துகொள்ளவும், புதிய ரோந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையும் 3 செக்டார்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு செக்டாருக்கும் தலா 6 போலீசார் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலா 2 பேர் வீதம், 3 ஷிப்டுகளாக பிரிந்து தங்கள் எல்லையில் ரோந்து வருவார்கள். இவர்களுக்கு 8 மணி நேரம் பணி நேரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையிலும் முக்கிய பிரமுகர்கள் வீடுகள், தனியாக வாழும் முதியோர்கள், கல்வி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் பாயிண்டு புத்தகம் என்ற புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. ரோந்து செல்லும் போலீசார் தாங்கள் ஒழுங்காக ரோந்து செல்வதை உறுதிபடுத்த, அவர்கள் ரோந்து செல்லும் இடங்களில் இருக்கும் பாயிண்டு புத்தகங்களில் தங்களது கையெழுத்தை பதிவு செய்ய வேண்டும். 
சென்னை நகரில் 15,500 பாயிண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரோந்து செல்லும் போலீசார் தாங்கள் ரோந்து செல்லும் பகுதிகளில் வாழும் முதியோர்களை தினமும் ஒருமுறையாவது நேரில் சந்தித்துப்பேசி அவர்களது குறைகளை கேட்டறிவார்கள். அவர்களுக்கு தேவைப்படும் உதவியை செய்து கொடுப்பார்கள். அவர்களை யார்-யார்? வந்து பார்க்கிறார்கள், சந்தேக நபர்கள் யாராவது அவர்களை சந்திக்கிறார்களா? என்பதை எல்லாம், ரோந்து போலீசார் தாங்கள் சந்திக்கும் முதியோர்களிடம் தினமும் கேட்டு அறிவார்கள். 
முதியோர்கள் மட்டும் அல்லாமல் தாங்கள் ரோந்து செல்லும் பகுதிகளில் வாழும் பொதுமக்களின் பிரச்சினைகளையும் கேட்டு அறிந்து, பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள். ரோந்து போலீசார் ரோந்து செல்வதற்காக 403 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ரோந்து போலீசார் மட்டும் அல்லாமல், கார்களிலும் தனியாக போலீஸ் ரோந்துப்பணி இருக்கும். 
இந்த ரோந்து திட்டத்தை போலீசாரும், பொதுமக்களும் இணைந்து சிறப்பாக செயல்படுத்திக்காட்ட வேண்டும். ரோந்து பணியை அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்காணிப்பார்கள். ரோந்து போலீசாரும் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். 
எழும்பூரில் எம்மா என்ற பெண் கொலை வழக்கில் குற்றவாளி யார்? என்பது ஓரளவு தெரிந்து விட்டது. விரைவில் குற்றவாளி பிடிபடுவான். அதுபோல கடந்த 2012-ம் ஆண்டில் ராயப்பேட்டையில் நடந்த பெண் கொலை வழக்கிலும் குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பூந்தமல்லியில் நடந்த கணவன், மனைவி கொலை வழக்கிலும் குற்றவாளி பற்றி துப்பு துலங்கி வருகிறது. அந்த வழக்கிலும் நெருங்கிய உறவினர் மீதுதான், சந்தேகம் உள்ளது. குற்றவாளிகளிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 
பேட்டியின்போது, கூடுதல் கமிஷனர்கள் கருணாசாகர், ஆபாஷ்குமார், இணை கமிஷனர் வரதராஜூ, உதவி கமிஷனர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு துணை இயக்குனர் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments: