Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
கோவையில் நடந்த மோதல் சம்பவத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., பா.ஜனதா வேட்பாளர் உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க.–பா.ஜனதா மோதல்
கோவை மேயர்தேர்தலையொட்டி நேற்றுமுன்தினம் பிரசாரம் முடிந்திருந்த நிலையில் சவுரிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் வெளியூரை சேர்ந்த அ.தி.மு.க.வினர் வீடுவீடாக சென்று ஆதரவு கேட்பதாக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த கட்சியின் மேயர் வேட்பாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் தொகுதி சின்னச்சாமி எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்து சம்பவம் குறித்து கேட்க முற்பட்டபோது, மோதல் சம்பவம் மேலும் அதிகரித்தது.
போலீசில் புகார்
இதில் பா.ஜனதா வேட்பாளர் நந்தகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டதுடன், ஒருசில நிர்வாகிகளின் சட்டைகளும் கிழிக்கப்பட்டன. அத்துடன் இருதரப்பினர் கார்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த மாநகர போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் சார்பில் பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
100 பேர் மீது வழக்கு
இந்த வழக்கு குறித்து போலீசார் கூறும்போது, தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பு நிர்வாகிகள் சார்பில் புகார் செய்யப்பட்டு உள்ளது. பா.ஜனதா நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் அ.தி.மு.க.வை சேர்ந்த சின்னச்சாமி எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீதும், அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் பா.ஜனதா மேயர் வேட்பாளர் நந்தகுமார் உள்பட 50 பேர் என்று மொத்தத்தில் 100 பேர் மீது, ஏராளமானோர் கூடி கலகம் செய்தல், வாகனங்களை உடைத்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது என்றனர்.

0 comments: