Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்களித்தனர்.பின்னர் அவர்கள் கூறும்போது,
எங்கள் கட்சிக்கே வெற்றி கிடைக்கும் என்று ஒவ்வொருவரும் நம்பிக்கை தெரிவித்தனர். 

அமைச்சர்
கோவை மேயர்தேர்தலில் தமிழக உள்ளாட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை 9 மணிக்கு ஓட்டு போட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் கோவை கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்றுக்காலை 7.45 மணியளவில் ஓட்டுப்போட்டார். அவருடன் மனைவி தயமந்தி, தாயார் புவனேஸ்வரி ஆகியோரும் சென்று வாக்களித்தனர்.
அப்போது கணபதி ப.ராஜ்குமார் கூறியதாவது:–
கோவை மாநகராட்சியின் அடிப்படை வசதிகளுக்காக முதல்–அமைச்சர் ரூ.2,378 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.நான் வெற்றி பெற்றால் கோவை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் சப்ளையை தீவிரமாக அமல்படுத்துவேன். கோவையின் பெரும் பிரச்சினையாக உள்ள போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா வேட்பாளர்
கோவை மேயர் தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் ஆர்.நந்தகுமார் நேற்று காலை 7–45 மணியளவில் துடியலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டுப்போட வந்தார். அவர் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.
ஓட்டு போட்டுவிட்டு வந்த பின்னர் அவர் கூறும்போது, ‘கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வெளியூரை சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி ஓட்டு போட முயற்சிக்கிறார்கள். போலீசும் தேர்தல் ஆணையமும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூ.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் பத்மநாபன் தனது மனைவி மனோன்மணியுடன் கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் மழலையர் பள்ளியில் காலை 8.15 மணிக்கு வந்து ஓட்டுப்போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆளும் கட்சி இடைத்தேர்தலை ஜனநாயக முறையில் நடத்தாததாலும், தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியதாலும் பெரும்பாலான மக்கள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டவில்லை. வெளியூர்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு தங்கி இருந்ததாலும், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாலும் பொதுமக்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடவில்லை. இதுவே வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணம் ஆகும்.
கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கைகள், எங்களுடைய நேர்மை, உழைப்பு ஆகியவற்றுக்கு பொதுமக்கள் தங்கள் வாக்குகள் மூலம் நியாயம் வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு பத்மநாபன் தெரிவித்தார்.
காந்தீய மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் டாக்டர் டென்னிஸ் கோயில் பிள்ளை, மஞ்சீஸ்வரி மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
எம்.எல்.ஏ.க்கள்
கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தா.மலரவன், கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மனைவி சியாமளாவுடன் சென்று வாக்களித்தார்.
சிங்காநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சின்னசாமி மசக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஓட்டு போட்டார்.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., வி.சி.ஆறுகுட்டி விளாங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் முதல் ஓட்டாக தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் மனைவி பானுமதி, மகன்கள் சஞ்சய், அருண்குமார் ஆகியோரும் ஓட்டுப்போட்டனர்.

0 comments: