Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
கோவை மேயர் தேர்தலில் புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பொதுமக்கள் ஓட்டுப்போடுவதில் ஆர்வம் செலுத்தினார்கள். 90 வயது மூதாட்டி உள்பட வயதான பெண்களை தூக்கி வந்து ஓட்டு போட வைத்தனர்.
புறநகர் பகுதியில் கூட்டம்
கோவை மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், கோவை புறநகர் பகுதியில் நேற்று காலை முதல் விறு,விறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கிராமப்புற பகுதிகள் அதிகம் நிறைந்த வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை முதல் விறு,விறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 166–வது வாக்குச்சாவடியில் மொத்தம் உள்ள 1,310 பேரில், காலை 11 மணியளவில் 501 பேர் ஓட்டு போட்டு இருந்தனர். இதனால் காலை 11 மணியளவில் இந்த வாக்குச்சாவடியில் 38 சதவீதம் ஓட்டுப்பதிவானது.
கோவை சுகுணாபுரம், அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் காணப்பட்டனர். இதனால் இந்த வாக்குச்சாவடியில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. பகல் 11 மணியளவில் 20 சதவீதமும், மாலை 3 மணியளவில் 40 சதவீதமும் ஓட்டுப்பதிவானது.கோவைபுதூரை சேர்ந்த மதீனா என்ற பெண், 4 மாத கைக்குழந்தையை கையில் தூக்கியபடி வந்து ஓட்டு போட்டார். அவர் வரிசையில் நிற்காமல் விரைவில் ஓட்டுப்போட பொதுமக்கள் வசதி செய்து கொடுத்தனர்.
93 வயது மூதாட்டி
வடவள்ளி மருதமலை ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 155–வது வாக்குச்சாவடியில் 93 வயது அங்கம்மாள், உறவினர் ஒருவரின் துணையுடன் ஆட்டோவில் வந்து ஓட்டு போட்டார். இதேபோல் அந்த வாக்குச்சாவடியில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.
கவுண்டம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டியம்மாள் என்ற 90வயது மூதாட்டியை கைத்தாங்கலாக தூக்கி வந்து உறவினர் உதவியுடன் ஓட்டு போட வைத்தனர். துடியலூர் பகுதியில் காலையில் விறு,விறுப்பாக ஓட்டுப்பதிவு காணப்பட்டது. பிற்பகலில் மந்த நிலையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கீர்த்தி என்ற மாணவி காலில் காயம் அடைந்த நிலையிலும், காரில் வந்து ஆர்வத்துடன் ஓட்டு போட்டார்.
கோவை புறநகர் பகுதிகளான வீரக்கேரளம், வடவள்ளி, சரவணம்பட்டி பகுதிகளில் ஆர்வமுடன் பொதுமக்கள் வாக்களித்தனர்.
மாலையில் விறு,விறுப்பு குறைந்தது
கோவை புறநகர் பகுதியில் காலையில் காணப்பட்ட விறு,விறுப்பு மாலையில் குறைந்தது. பல வாக்குச்சாவடிகளில் பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் ஓட்டு போட்டனர்.
ஓணாப்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பல வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டு இருந்ததால் இந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
ஓட்டுப்போட்டுவிட்டு வந்தவர்கள் கூறும்போது, திரும்ப, திரும்ப தேர்தல் நடைபெறுவது தேவையில்லாதது, மக்களின் வரிப்பணம் விரையமாகிறது. எனவே அவசியமானால் மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

0 comments: