Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
கோவை மேயர் தேர்தலில் அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி, வாக்குச்சாவடி அருகே பாரதீய ஜனதாவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பாரதீய ஜனதாவினர் எதிர்ப்பு
கோவையை அடுத்த துடியலூர் 1–வது வார்டு பகுதியில் நேற்று காலை ஓட்டுப்பதிவு நடைபெற்றுகொண்டிருந்தது.அப்போது அந்த பகுதியில் வெளியூரை சேர்ந்த சிலர் நின்றுகொண்டு அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பதாக பாரதீய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அங்கிருந்த அ.தி.மு.க.வினருக்கும், பாரதீய ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினார்கள்.
சம்பவ பகுதிக்கு பாரதீய ஜனதா வேட்பாளர் நந்தகுமார் வந்து பார்வையிட்டார். அவர் கூறும்போது, வெளியூரை சேர்ந்த அ.தி.மு.க.வினர் துடியலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் குவிந்து நின்று வாக்குச்சாவடி அருகே அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
கள்ள ஓட்டு போட முயற்சி
இந்த நிலையில் கவுண்டம்பாளையம் ராமசாமி பள்ளியில் 32–வது வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை பிடித்து பாரதீய ஜனதா பிரமுகர் சந்திரன் என்பவர் போலீசில் ஒப்படைத்தார். அவர் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் ஆவார். துடியலூர் போலீசார் அவரை வேனில் ஏற்றி சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவை 32–வது எண் வாக்குச்சாவடியில் ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக கூறி, பாரதீய £னதா கட்சியினர் வாக்குச்சாவடி அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட கூடுதல் துணைசூப்பிரண்டு அதிவீரபாண்டியன், மற்றும் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினார்கள். சம்பவ இடத்துக்கு பாரதீயஜனதா மாநில செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆகியோரும் வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அழைத்துச்சென்றனர்.
துடியலூர் பகுதியில் ஓட்டுப்பதிவு தொடங்கிய காலை முதல் மாலைவரை இருகட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றம் நிலவியதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

0 comments: