Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
தி்ருப்பூர் 22வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் 
வேலுச்சாமியை வெற்றி பெறச் செய்ய உறுதி
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆர்.வேலுச்சாமியை வெற்றி பெறச் செய்வதென 22வது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டது.
22வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் கே.எஸ்.கே.படிப்பகத்தில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் கூட்டம் நடைபெற்றது. ரங்கநாதபுரம் சி.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் 22வது வார்டு வேட்பாளர் ஆர்.வேலுச்சாமியை அறிவித்து, இந்த தேர்தலின் அரசியல் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாநகரச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.முருகேசன், மாநகரக்குழு உறுப்பினர்கள் இ.பி.ஜெயகிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் தேர்தல் பணி குறித்து உரையாற்றினர்.
உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்த வார்டின் மீது ஆளும்கட்சி மாநகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி குப்பை அள்ளுவது, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். மக்களை ஏமாற்றி வாக்ககுளை வாங்கலாம் என ஆளும்கட்சியினர் பணபலத்துடன், இறுமாப்புடன் செயல்படுகின்றனர்.
அதேசமயம் இந்த வார்டு கம்யூனிஸ்ட் இயக்கம் பலம்மிக்க பகுதியாகும். அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் இந்த வார்டு மக்களுக்கு மிகவும் அறிமுகமான சின்னம். கடந்த பல உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டு அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 
இந்த பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டம், கழிவுநீர் வெளியேற்றம், சாலை செப்பனிடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தேர்தலுக்கு முன்புவரை எதுவும் செய்யாமல் மாநகராட்சி முடங்கிக் கிடந்தபோது, பல்வேறு இயக்கங்களை நடத்தி பணிகளை செய்ய வைத்தது மார்க்சிஸ்ட் கட்சி. எனவே நாம் செய்த பணிகளை மக்களிடம் கொண்டு சென்று வீதிகள்தோறும், வீடு வீடாக மக்களைச் சந்தித்து இதைச் சொன்னாலே நாம் வெற்றி பெறுவது உறுதியாகிவிடும். எனவே செப்டம்பர் 18ம் தேதி வரை அனைத்து கட்சி உறுப்பினர்கள், ஊழியர்கள் ஓய்வின்றி தேர்தல் பணியாற்றி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.வேலுச்சாமியை வெற்றி பெறச் செய்வோம் என்று இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் 22வது வார்டுக்கு உட்பட்ட கட்சி ஊழியர்கள் முழுமையாகப் பங்கேற்றனர்.


0 comments: