Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    



2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பாளி என்று முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் குற்றஞ் சாற்றியுள்ளார்.

தொலைத் தொடர்பு துறை அமைச்சராக ஆ.ராசா  இருந்த போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

இதேபோல், பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங் நிலக்கரி இலாகா பொறுப்பையும் கவனித்த போது, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அந்த குழு தனது அறிக்கையில் கூறி இருந்தது. இந்த இரண்டு ஊழல் வழக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த ஊழல்களை அம்பலப்படுத்திய போது மத்திய கணக்கு தணிக்கையாளராக இருந்தவர் வினோத் ராய். இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர், ‘ஒரு கணக்காளன் மட்டும் அல்ல’ என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தில் இந்த ஊழல்கள் பற்றி அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் மன்மோகன் சிங் மீது குற்றம் சாற்றியுள்ளார்.

வினோத் ராய் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாகக் குற்றம் சாற்றியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரங்களில் தனக்குள்ள பொறுப்பில் இருந்து தப்பிக்க மன்மோகன் சிங்குக்கு எந்த வழியும் இல்லை.

2ஜி ஒதுக்கீடு தொடர்பாக ஆ.ராசா எழுதிய அனைத்து கடிதங்களுக்கும் மன்மோகன் சிங் பதில் எழுதி இருக்கிறார். நான் எழுதிய கடிதத்துக்கு மன்மோகன் சிங்கிடம் இருந்து ஒரு பதில் கூட கிடையாது.

ஒரு சமயம் நான் அவரை சந்தித்த போது, ‘என்னிடம் இருந்து நீங்கள் பதிலை எதிர்பார்க்க மாட்டீர்கள் என கருதுகிறேன்‘ என்று கூறினார். அந்த சமயத்தில் அவர் ஆ.ராசாவுக்கு ஒரு நாளைக்கு இருமுறை பதில் அளித்தார்.

அப்படி இருக்கும் போது, எடுக்கப்பட்ட முடிவுகளில் அவர் எப்படி பொறுப்பாளி ஆகாமல் இருக்க முடியும்? நிதி ரீதியாக மட்டுமல்லாமல், அறிவுப்பூர்வமாகவும், செய்யும் பணியிலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

அரசியல் சாசனப்படி உறுதிமொழி ஏற்றதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட முடியாது. அதுதான் அவருக்கு மிகுந்த கவலையாகிவிட்டது.

அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கணக்கு தணிக்கை துறை மதிப்பீடு செய்த முறை தவறானது என்று நவம்பர் 16 ஆம் தேதி மன்மோகன் சிங் என்னிடம் கூறினார்.

அதற்கு நான் அவரிடம், ‘சார் எங்கள் மதிப்பீடு சரியான முறையில் செய்யப்பட்டதுதான், அது நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முறைதான்‘ என்று பதில் அளித்தேன். இவ்வாறு வினோத் ராய் தெரிவித்தார்.

0 comments: