Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    


திருப்பூர், : விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் கடந்த 29ம் தேதி துவங்கியது. இதையொட்டி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் சார்பில், 1500க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் கடந்த மாதம் 29ம் தேதி முதலே விசர்ஜனம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 750 சிலைகள் நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டன. 
இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலைகள், பெருமாநல்லூர் ரோட்டில் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவமனை முன்பு இருந்தும் மற்றும் செல்லம் நகரில் இருந்தும் என 3 இடங்களில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான இந்துமுன்னணி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் ஆலாங்காடு, நடராஜா தியேட்டர் ரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விசர்ஜன பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு பின்னர் அங்கிருந்து மீண்டும் சிலைகள் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. இதையொட்டி, திருப்பூர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் விசர்ஜனம் நடந்தது. 
அனுப்பர்பாளையம் காவல்நிலையத்துக்குட்பட்ட ஸ்ரீநகர், திருப்பூர் தெற்கு காவல்நிலையத்துக்குட்பட்ட பெரியதோட்டம், திருப்பூர் வடக்கு காவல்நிலையத்துக்குட்பட்ட கோல்டன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்திருந்தனர். இதையடுத்து, அந்த பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஸ்ரீநகர், பெரியதோட்டம், கோல்டன் நகர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

0 comments: