Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    
கட்டடத் தொழிலில் ஈடுபடுவோரை மிரட்டி, கமிஷன் கேட்டு கடத்தலில் ஈடுபடுவோர் மீது, போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கட்டடத் தொழிலில் ஈடுபடும் தொழிலதிபர்களை இடம்வாங்கித் தரும் புரோக்கர்கள் எனும் பெயரில் சிலர் மிரட்டி பணம் பறிப்பதாக, கடந்த ஆட்சியில் புகார்கள் எழுந்தன. இப்பிரச்னை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலித்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மதுரையில் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், சமீப காலமாக கமிஷன் எனும் பெயரில், கட்டடத் தொழிலில் ஈடுபடுவோரை கடத்தி சிலர் பணம் பறிக்க முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சுதந்திர தினத்தன்று (ஆக.15) மதுரையில் மலையரசன் என்பவர் கடத்தப்பட்டுள்ளார். கடத்தலுக்கு, இடம் வாங்கிய கமிஷன் பிரச்னையே காரணம் என்கிறார்கள் போலீஸார். அப்படியே இருந்தாலும், பிரச்னையை சட்டரீதியாக அணுக வேண்டுமே தவிர, கடத்திப் பணம் கேட்பது சட்டப்படி குற்றந்தானே.
இப்பிரச்னை குறித்து போலீஸார் வழக்குப் பதிந்தும், தொடர் நடவடிக்கை எடுக்கவில்லையாம். கடத்தல் கும்பல் பயன்படுத்திய வாகனம் போலியான பதிவெண் கொண்டது எனவும் கூறப்படுகிறது. மேலும், தொழிலதிபர்களில் பலருக்கு தொலைபேசி மூலம் கமிஷன் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்து வருகின்றன.
சட்ட விரோதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். முதல்வர் அலுவலக மனுக்கள் மீது சிறப்பாக நடவடிக்கை எடுத்து, சிறந்த மாநகர காவல்துறை ஆணையர் விருதுபெற்ற மதுரை ஆணையர் சஞ்சய் மாத்தூர், நிச்சயம் சட்டவிரோதக் கடத்தல் கும்பல் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பார் என்பதே மக்கள் நம்பிக்கையாக உள்ளது.
இது குறித்து, ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் கேட்டபோது, நீண்ட காலமாக உள்ள கொடுக்கல், வாங்கல் பிரச்னையில், ஒருவரை சிலர் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அதையே கடத்தலாகக் கூறுகின்றனர். எனினும், இப்பிரச்னையில் சட்டத்தை மீறி செயல்படுவோர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 comments: