Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    
கர்ப்பப் பையினுள் கட்டிகள் இருந்தால், கருத்தரிப்பில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், குஜராத் மாநில டாக்டர் திவ்யேஷ் சுக்லா தெரிவித்தார்.
பெண்களுக்கான லேப்ராஸ்கோபிக் மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சை முன்னேற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது. அதில், அவர் சிறப்புரையாற்றியதாவது:
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை நம் நாட்டில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. கர்ப்பப் பை கட்டிகளையும், தேவையற்ற சதைகளையும் லேப்ராஸ்கோபிக் மூலம் அகற்றலாம்.
பொதுவாக, கர்ப்பப் பையில் கட்டிகள் இருப்பவர்களுக்கு நீண்ட நாள்கள் குழந்தைகள் இல்லாத நிலை உள்ளது. அதுபோன்ற குறைபாடுடைய பெண்களுக்கு லேப்ராஸ்கோபிக் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் நிலையில், அவர்கள் கருத்தரிக்கவும் வாய்ப்புள்ளது. லேப்ராஸ்கோபிக் முறை சிகிச்சையால் தேவையற்ற மருந்து, மாத்திரைகளை தவிர்ப்பதுடன், பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம் என்றார்.
பின்னர், மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி தலைமை வகித்துப் பேசுகையில், தகவல் பரிமாற்றத் துறை மருத்துவத் துறைக்கு பேருதவியாக உள்ளது என்றார். மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு பேராசிரியை டாக்டர் உமாதேவி பேசுகையில், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் உரிய நேரத்தில் அவர்களை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் உயிரைக் காக்கும் சிகிச்சை அளிக்கலாம் என்றார்.
இதில், டாக்டர் பத்மா வரவேற்றார். டாக்டர்கள் மீனாம்பாள், அங்கையற்கண்ணி, ரேவதி ஜானகிராமன், லலிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டாக்டர் சாந்தி நன்றி கூறினார்.

0 comments: