Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்தும், காயமடைந்தவர்களை கயிறு மூலம் எப்படி மீட்பது என்றும் தீயணைப்பு துறையினர் நேற்று செய்து காண்பித்தனர்.

அடுக்குமாடி கட்டிடங்களில்...

சென்னையை சுற்றி ஏராளமான அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கின்றன. அதில் சில நிறுவனங்களும், குடியிருப்புகளும், வணிகவளாகங்களும் செயல்படுகின்றன. இதுபோன்ற கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தப்பிப்பது எப்படி? என்பது குறித்த செயல்முறை விளக்கத்தை தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர்.

நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ’வில் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் செய்து மெய்சிலிர்க்க வைத்தனர். முதலில் ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ’வில் புகை வருவதை போல சித்தரித்தனர்.
செயல்முறை விளக்கம்

இதைத்தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி கட்டிடத்தில் ஒலித்தது. அதன்பின்னர், கட்டிடத்தில் உள்ளே பணிபுரியும் வணிகவளாக ஊழியர்கள் உடனே பதறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். அதனையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பது போல செய்து காண்பித்தனர்.

கட்டிடத்தின் 3-வது மாடியில் சிக்கிக்கொண்ட வணிக வளாக ஊழியர்களை காப்பாற்றுவதை போலவும், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்தும் செய்து காண்பித்தனர்.

கயிறு மூலம் மீட்பது எப்படி?

ஒவ்வொரு முறையும் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கும் போது, ‘ஸ்கை லிப்ட்’ என்ற வாகனத்தை தான் பயன்படுத்துவார்கள். ஆனால் நேற்று தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் மீட்பது எப்படி? என்று செய்து காண்பித்தனர்.

இதற்காக 3 நாட்களுக்கு முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வு பெற்ற மைக்கேல் என்பவர், தீயணைப்பு துறையினருக்கு கயிறு மூலம் கட்டிடத்தில் இருந்து காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? என்று கற்றுக்கொடுத்து இருந்தார்.

அதை நேற்று முதன்முதலாக தீயணைப்பு வீரர்கள் ‘தத்ரூபமாக’ செய்து காண்பித்தனர். முதலில் காயமடைந்தவர்களை கயிறு மூலம் 3-வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே இறக்குவது எப்படி?. அதே போல் அதிக காயமடைந்தவர்களை ‘ஸ்டெரச்சரில்’ வைத்து கயிறு மூலம் இறக்குவது எப்படி? என பல்வேறு முறைகளை செய்து காண்பித்தனர்.

சிலந்தி மனிதன்

வணிக வளாக ஊழியர்கள் இதை பார்த்து மெய் சிலிர்த்து கைத்தட்டி தீயணைப்பு துறை வீரர்களை மேலும் உற்சாகப்படுத்தினர். இதில் இறுதியாக ஒரு பெரிய சாகச நிகழ்ச்சி ஒன்றை ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மைக்கேல் செய்து காண்பித்தார்.

எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 120 அடி உயர கட்டிடத்தின் உச்சியில் இருந்து கயிறு உதவி மூலம் சிலந்தி மனிதன் (ஸ்பைடர் மேன்) போல் நடந்து கீழே வந்தார்.

செயல்முறை விளக்கம் முடிந்ததும், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்கள் வணிக வளாக ஊழியர்களுக்கு தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எடுத்து கூறினார்கள். 

0 comments: