Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by Unknown in , ,    

ஆசை இருக்கலாம். ஆனால், பேராசை கூடவே கூடாது என்பதைச் சொல்லும் பல கதைகளைக் கேட்டுவிட்டோம். பல படங்களையும் பார்த்துவிட்டோம். ஆனாலும் நம்மவர்களுக்கு முதலீடு விஷயத்தில் பேராசை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. விளைவு, கொள்ளை லாபம் என கவர்ச்சி காட்டும் மோசடி நிறுவனங் களின் சதிவலையில் விட்டில் பூச்சிகளாக விழுந்து, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைத் தொலைக்கிறார்கள்.
சஹாரா, சாரதா, இப்போது லேட்டஸ்ட்-ஆக பிஏசிஎல் என்கிற வரிசையில் இன்னொரு நிறுவனமும் சேரத் தயாராகி வருகிறதோ என்ற ஐயம் நம் வாசகர்களுக்கு எழுந்துள்ளது. மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில்  வெகுவேகமாக வளர்ந்து வரும் எம்ஆர்டிடி என சுருக்கமாக அழைக்கப்படும் மதுரை ரூரல் டெவலப்மென்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் இந்தியா லிமிடெட் (MADURAI RURAL DEVELOPMENT TRANSFORMATION INDIA LIMITED) நிறுவனம்தான் அது!
‘பொதுமக்களிடமிருந்து கூட்டாக பணத்தைத் திரட்டி முதலீட்டுத் திட்டங்களை  (Collective Investment Scheme) நடத்துவதற்கு நிதிச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான  செபியிடம் அனுமதி வாங்க வேண்டும். செபியிட மிருந்து அனுமதி வாங்காமல் பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டினால், அந்த முதலீட்டுக்கு எந்த வகையிலும் அரசிடமிருந்து பாதுகாப்பு பெற முடியாது. இதுபோன்ற கூட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு செயல்படுத்த செபியிடமிருந்து ஒப்புதல் பெறுவது அவசியம் என்பதை பல உத்தரவுகள் மூலம் வலியுறுத்தியுள்ளது. இப்படி இருக்கையில், மதுரையில் உள்ள இந்த எம்ஆர்டிடி நிறுவனம் மக்களிடமிருந்து பணத்தை வசூலிப்பது சரியா?’’ என மதுரையிலிருந்து நம் வாசகர் ஒருவர் போன் செய்து கேட்டார். இதனையடுத்து, இந்த நிறுவனம் பற்றி விசாரிக்க ஆரம்பித்தோம். விசாரித்ததில் நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.
23 கிளைகளுடன்...
எம்ஆர்டிடி நிறுவனம் பொதுமக்களிட மிருந்து பணத்தைத் திரட்டுவதோடு, அதற்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையையும் டிவிடெண்டாக வழங்கி வருகிறது. சிறு சேமிப்பு கணக்கு, வைப்பு நிதித் திட்டம், தங்க நகைக் கடன், ஃபெனிபிட் ஃபண்ட் திட்டம், பென்சன் திட்டங்கள் என அரசின் சகல அனுமதி களையும் வாங்கி நடத்தும் தேர்ந்த ஒரு நிதி நிறுவனம்போல, இந்த நிறுவனமும் பல திட்டங்களை நடத்தி வருகிறது.
நாம் திரட்டிய விவரங்கள் வகையில் இந்த நிறுவனம் 23 பிரதான கிளைகளுடனும், 60-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் மையங்களுடனும் இயங்கி வருகிறது. பொதுமக்களை நேரடியாக உறுப்பினராகச் சேர்ப்பதன் மூலம் பணத்தைத் திரட்டுவதுடன், எம்எல்எம் முறையில் உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலமும் பணத்தை வசூல் செய்து வருகிறது.
தென் மாவட்டங்களில் மதுரை, திருமங்கலம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி என பல ஊர்களிலும் மேற்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி தொடங்கி, திருச்சி, தஞ்சாவூர் என தமிழகத்தின் மையப் பகுதிகளிலும் கிளைகள் அமைத்து எக்கச்சக்கமான பணத்தை மக்களிடமிருந்து திரட்டி வருகிறது.
மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் எதிரில் இருக்கும் எம்ஆர்டிடி அலுவலகத்துக்கு ஒருநாள் காலை நேரத்தில் சென்றோம். ஐம்பது பேர் அமரக்கூடிய ஓர் அறையில் குழுமியிருக்கிறார்கள் மக்கள். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் கிடைக்கப்போகும் பயன்கள் என்னென்ன என்பதை வகுப்பறையில் விளக்குவது போல விளக்கிக் கொண்டிருந்தார் களப்பணியாளர் ஒருவர். அவர் பேச்சை கேட்ட வாடிக்கையாளர்கள், கையில் வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு உடனடியாக கவுன்டரில் போய் பணத்தைக் கட்டுகிறார்கள்.
‘என் மகளோட படிப்புக்கு பணம் சேர்க்கிறேன் சார்’, ‘என் மகனோட கல்யாணத்துக்கு பணம் போட்றேங்க’ என ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு, கண்கள் நிறைய கலர்கலரான கனவுகளுடன் பணத்தைக் கட்டுகிறார்கள். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய பிஏசிஎல் நிறுவனம் பற்றியோ, அந்த நிறுவனம் பற்றி செபி வெளியிட்டுள்ள அறிக்கை பற்றியோ அவர்கள் கொஞ்சமும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.
முதலீடு 25,000; வருமானம் 72,000...
சிறு சேமிப்புத் திட்டத்தில் மாதம் 100 ரூபாய் முதல் சேமிக்கலாம். ஆண்டுக்கு 8 சதவிகித வட்டி தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் விபத்துக் காப்பீடு, இயற்கை மரண இழப்பீட்டுத் தொகை, மருத்துவச் செலவு பலன்கள் என பல  சலுகைகளைக் கொட்டுகிறார்கள்.
மூன்று வருட சிறுசேமிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் மாதம் 100 வீதம் 3 வருடங்களுக்கு கட்டி முடித்ததும்
(36 மாதங்கள்) 37-வது மாதத்திலிருந்து அடுத்த மூன்று வருடங்களுக்கு மாதம் 150 வீதம் 72 மாதங்களுக்குத் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் தரப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் தற்போது அதிவேகமாக விற்பனையாகும் திட்டம் இதுதான். அதாவது, 25 ஆயிரம் பணம் செலுத்தி முதலீட்டாளராக இணைந் தால், மாதம் ரூ.2,000 வீதம் 36 மாதங்களுக்கு டிவிடெண்ட் வழங்கப்படும் (36x2: 72,000). (மூன்று வருட முடிவில் அசல் திரும்பத் தரப்படமாட்டாது!)
இதுதவிர, குழந்தைகள் பெயரிலான முதலீட்டுத் திட்டங்கள், வைப்பு நிதித் திட்டங்கள் என பல திட்டங்கள் பெயரிலும் பணம் வசூல் செய்யப் படுகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் கவர்ச்சிகரமாக இருக்கவே, மக்களும் நீ முந்தி, நான் முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு பணத்தைக் கட்டுகிறார்கள்.
இந்த லாபம் சாத்தியமா...
இந்த நிறுவனம் சொல்லும் லாபத்தைத் தருவது சாத்தியமா?
பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடமோ அல்லது செபியிடமோ முறைப்படி பெற்றிருக்கிறதா என்பதை விசாரிக்க இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டோம். நிறுவனத்தின் புரமோட்டர்கள் யாரும் நம்மை சந்திக்கத் தயாராக இல்லை. (இந்த நிறுவனத்தின் புரமோட்டர்கள் யார் என்பதையே படுரகசியமாக வைத்திருக்கிறார்கள்!) என்றாலும் இந்த நிறுவனத்தின் சார்பாக சிலர் நம்மை சந்தித்து, நிறுவனம் பற்றியோ, அதன் திட்டங்கள் பற்றியோ எதுவும் எழுத வேண்டாம் என நம்மிடம் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை நாம் சட்டை செய்யாத நிலையில் வேறு வழியில்லாமல் நாம் கேட்ட கேள்வி களுக்கு பதில் அனுப்பி வைத்தனர். நிறுவனம் தொடர்பாக நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அந்த நிறுவனத்தின் சார்பில் அளித்த பதிலும்
இனி: நம் கேள்விகளும் அவர்களின் பதிலும்...
பொதுமக்களிடமிருந்து முதலீடு களைத் திரட்ட ரிசர்வ் வங்கியிடமிருந்து முறையாக அனுமதி உள்ளதா?
‘‘எமது நிறுவனம் கம்பெனிகள் சட்டம் 1956 பிரிவு 23(1)ன் கீழ் பதியப் பெற்று 10 கோடியை அனுமதிக்கப்பட்ட முதலீடாகக் கொண்டு ரூ.100க்கு  1 பங்கு என்கிற முறையில் எமது நிறுவனத்தில் இணையும் பங்குதாரர்களுக்கு பங்கு பத்திரங்கள் வழங்கி நிறுவனம் மேற்கொள்ளும் தொழில்களுக்கான முதலை திரட்டுகிறது.
இது ஆர்பிஐ சட்ட விதி 45 I bb-ன் படியும் கம்பெனி விதிகள் (Acceptance of Deposits) 1975 பிரிவு 2 (b) ( VII)-ன் படியும் முதலீடு என்கிற பதத்தில் வராது.
பங்குகளை வெளியிட்டு முதல் திரட்டும் செயல்முறைகள் ஆர்பிஐ அல்லாமல் சிஎல்பி (CLB) என்ற கம்பெனி சட்ட வாரியத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது. பிரிவு 3 கம்பெனிகள் சட்டம், 1956-ன் கீழ் பதியப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே ரிசர்வ் வங்கியின் கீழ் நிர்வகிக்கப்படும்.’’
பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் முதலீடுகளை வைத்து நிறுவனம் என்ன தொழிலை மேற்கொள்கிறது?
‘‘பொதுமக்களிடமிருந்து வாங்குவதாகச் சொல்வதைவிட எனது நிறுவன திட்டங்களில் இணையும் பயனர்களைப் பங்குதாரர்களாக இணைத்து அதன்மூலம் சேகரிக்கப்படும் தொகையினை எமது MOA-ன்படி அனுமதிக்கப்பட்ட தரிசுநில மேம்பாடு, காலிமனை வாங்குதல், விற்றல், தரகு போன்ற தொழில்களில் ஈடுபட்டு லாபமீட்டுகிறது.’’
ரியல் எஸ்டேட் முதலீடு என்றால் அதை எந்த வகையில் முதலீட்டாளர் களுக்கு விளக்குகிறீர்கள்?
‘‘நில மேம்பாடு என்கிற வகையில் எங்களுடைய நிலத்தை சீர்செய்து வீட்டுமனைகளாகவும், வீடுகளாகவும், மேம்படுத்தி, வெளிச்சந்தையிலும், எமது பயனர்களிடம் விற்பதன் மூலமும் லாபம் சாத்தியமாகிறது.’’
பொதுமக்களைப் பங்குதாரராகச் சேர்ப்பதாகக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் மாதாமாதம் கொடுக்கப்படும் தொகைக்கு என்ன கணக்கு?
‘‘வட்டி என்ற பேச்சுக்கே எமது நிறுவனத்தில் இடமில்லை. இதைத் தவறாகப் புரிந்துகொண்ட சில முகவர்களால் சொல்லப்படும் திட்ட விளக்கமாகும். மாறாக, எமது நிறுவனம் பிரிவு 80 இந்திய கம்பெனிகள் சட்டம் 1956-லும் பிரிவு 55 இந்திய கம்பெனிகள் சட்டம் 2013-ன்படியும் அனுமதிக்கப் பட்ட Redeemable preference shares என்ற வகையில் பயனர் செலுத்திய முழுத் தொகையோடு பங்கு ஆதாயத்தையும் சேர்த்து குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்ப அளிக்கும் முறையே ஆகும். முதலில் செலுத்தும் தொகை திட்ட முடிவில்  திருப்பச் செலுத்தப்படு வதில்லை.’’
உங்களது இணையதளத்தில் பொதுமக்களுக்குத் தேவையான விவரங்கள் எதுவும் இல்லையே?
‘‘எங்களது இணையதளத்தைத் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அதிகமாகக் கேட்கப் பட்ட கேள்விகளை ஒருங்கிணைத்து (அனைத்து கேள்விகளுக்கும்) அவற்றுக்குப் பதிலளிக்கும் பணிகள் நிறைவடையும்.’’
நீங்கள் வாங்கி விற்கும் நிலங்கள் குறைவான காலத்திலேயே லாபம் தரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? வாங்கியுள்ள இடங்கள் என்ன பெயரில் அல்லது யார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது?

‘‘எமது நிறுவனம் வழங்கும் அனைத்து நிலங்களும் நிறுவனத்தின் பெயரிலேயே பதியப்படுகின்றன. இவை அனைத்தும் எவ்வித ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படையாகவே நடைபெறுகிறது’’ என்று விளக்கம் தந்திருந்தனர்.
இந்த நிறுவனம் தந்த விளக்கம் சரியானதுதானா என நன்கு விஷயம் தெரிந்த சில ஆடிட்டர்களிடம் கேட்டோம்.
‘‘இந்திய நிறுவனங்கள் பதிவுச் சட்டம் 1956-ன்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து பங்கு வெளியீடு, கடன் பத்திரம் /பாண்டு வெளியீடு, டெபாசிட் பெறுவது மூலம் நிதி திரட்ட முடியும். எம்ஆர்டிடி நிறுவனம், தாங்கள் பொதுமக்களிடமிருந்து திரட்டும் முதலீடு கம்பெனிகள் சட்டம் 1975 (டெபாசிட் திரட்டுதல்) கீழ் வராது என்று சொல்லி இருக்கிறது. மேலும், பொதுக் காப்பீடு தொடர்பான திட்டங்களை ஒப்பந்தப்படி மேற்கொள்வதாகவும் அதற்கு ஏற்ப கமிஷன் பெறுவதாகவும் அறிவித்துள்ளனர்.
எனினும், பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டும் தொகை, திரும்பக் பெறக்கூடிய முன்னுரிமை பங்குகளை வெளியிடுவதன் மூலம் திரட்டுவதாகக் கூறுகிறது. கம்பெனிகள் சட்டம் இதை அனுமதிக்கிறது. ஆனால், இதை மறைமுகமாகக் கடன் வாங்குதல் போன்ற ஏமாற்றும் உத்தியாகப் பயன்படுத்தக் கூடாது.
கம்பெனிகள் சட்டத்தின்படி (கம்பெனிகள் சட்டம் 1956 மற்றும் 2013) திரும்பக் பெறக்கூடிய முன்னுரிமை பங்குகளுடைய (Redeemable preference shares) முதலீட்டு தொகையை லாபத்திலிருந்து தரவேண்டும் அல்லது புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் தரவேண்டும். நிறுவனம் முன்னுரிமை பங்குகளுக்கான தொகையைத் தர நிறுவனத்தில் லாபம் இல்லை எனில், புதிய பங்கு வெளியீட்டின் மூலம் தரவேண்டும். இதன் பொருள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்தால் எளிதில் பங்குகளை விற்றுக் கொள்ள முடியும். அப்படி இல்லை எனில், மற்றவர்களுக்கு விற்பது கடினம். இதை எந்த அளவுக்கு முதலீட்டாளர் களுக்கு விளக்கி சொல்லி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த நிறுவனம் முன்னுரிமை பங்குகள் மூலம் எத்தனை நபர்களிடம், எவ்வளவு தொகை முதலீடாகத் திரட்டி யுள்ளது என்பதும் தெரியவில்லை. ஒரு நிறுவனம் தனது மூலதனத்தை அதிகரிக்கப் பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிட விரும்பினால், அது ஐபிஓவாகக் கருதப்படும். அது செபியிடம் அனுமதி பெற்றபிறகே மேற்கொள்ள முடியும். இதற்காக செபியிடம் அனுமதி வாங்கவில்லை என்றால் அது கூட்டு முதலீட்டு திட்டமாகவே கருதப்படும். அப்படியான முதலீட்டை செபி தடைசெய்துள்ளது.
இந்த நிறுவனம் அதிகபட்சம் எவ்வளவு தொகை திரட்ட திட்ட மிட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். முன்னுரிமை பங்குகளுக்கான தொகை, அதன் முதிர்வின்போது எந்த நிதி ஆதாரத்திலிருந்து தரப்போகிறார்கள் என்பதையும் விளக்க வேண்டும்.
எனவே, இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை, இது இன்னொரு கலைமகள் சபா, சஹாரா குழுமம் போல மாற வாய்ப்புள்ளது. எனவே, இதில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்’’ என்றார்கள்.
எம்ஆர்டிடி நிறுவனம் பதில்களை சென்னையின் முக்கியமான கம்பெனி செகரட்டரி ஒருவரிடம் காட்டி, விளக்கம் கேட்டோம். ‘‘பொதுவாக, கம்பெனி சட்டப்பிரிவு 3-ன் கீழ்தான் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். 23(1) என்று குறிப்பிட்டுள்ளது, பெயர் மாற்றம் குறித்த சட்டப்பிரிவுதான். மேலும், கம்பெனி சட்டம் 2013-ன்படி இயக்குநர் அல்லாதவரிடம் டெபாசிட் பெற முடியாது. அவ்வாறு பெறும்பட்சத்தில் Acceptance of deposit Rules 2014 பொருந்தும்.
முன்னுரிமை பங்குகள் விற்கும் நிறுவனங்கள், அதற்கான அனுமதிக்கப் பட்ட முதலீடு இல்லாமல் அவற்றை ஏற்க முடியாது. எனவே, இந்த நிறுவனம் குறிப்பிட்ட தகவல்கள் அடிப்படையில்  முதலீடுகளைப் பொதுமக்களிடமிருந்து வசூலிக்க முடியாது. வசூலிக்கவும் கூடாது’’ என்றார்.
இந்த நிறுவனம் செபியிடம் அனுமதி வாங்கித்தான் மக்களிடமிருந்து பணம் வசூலிக்கிறதா என்பதை அறிய செபி நிறுவன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டோம். பெயர் குறிப்பிடாமல் பேசிய செபி அதிகாரிகள், ‘‘பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலிக்க இந்த நிறுவனத்துக்கு நாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை’’ என்றதோடு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்தனர். மேலும், இந்த நிறுவனத்தைப் பற்றி செபி விரைவில் விசாரிக்கத் தயாராகி வருவதாகவும் தெரிகிறது.
இப்படி ஒரு நிறுவனம் மதுரையில் செயல்படுகிறது என்கிறபோது இதனைத் தடுக்க காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை அறிய மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகளுடன் பேசினோம். பெயர் சொல்ல விரும்பாத அந்த அதிகாரிகள்,  ‘‘நீங்கள் சொல்லும் நிறுவனத்தை நாங்கள் கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம். புகார்கள்  வரவில்லை என்றாலும்  அவர்கள் செய்வது ஏமாற்று என்பது மட்டும் தெரிகிறது’’ என்றார்கள்.
ஆகமொத்தத்தில்  இந்த நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களில் பணம் போடுவது ரிஸ்க் என்பது மட்டும் தெரிகிறது.  பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்தால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்காமல் இருக்கலாம்!



0 comments: