Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த பாலிடெக் னிக் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9.30 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், “திருவொற்றியூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது” என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிக்கு விரைந்து சென்று அங்கிருந்த மாணவ-மாணவிகளை வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி விளையாட்டு திடலில் கொண்டு சென்று நிறுத்தினர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர் பாலசுப்பிரமணி தலைமையில் ஒவ்வொரு அறையாக சோதனை போட்டனர். மோப்ப நாய் ஆனந்த் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு உள்ளதா? என்று பார்த்தனர். பாலிடெக்னிக் கல்லூரி முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்து பார்த்த போதும் எங்கும் வெடிகுண்டு சிக்கவில்லை.
அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்தே அனைவரும் பெருமூச்சு விட்டனர். பின்னர் மதியம் 1.30 மணிக்கு போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பாலிடெக்னிக் கல்லூரியை விட்டு வெளியேறினர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 comments: