Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
ஆட்டோ திருட்டு: திருப்பூர், கரட்டாங்காடு 4வது வீதியில் வசிப்பவர் சிவகுமார், 40; சரக்கு ஆட்டோ இயக்கி வருகிறார். இவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை, வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். கடந்த 13ம் தேதி, மர்ம நபர்கள் சரக்கு ஆட்டோவை திருடிச் சென்றனர். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை விற்றவர் கைது: இடுவம்பாளையம், கிழக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அதே பகுதியில், டீக்கடை நடத்தி வருகிறார். வீரபாண்டி போலீசார், இவரது கடையில் சோதனை நடத்தினர். புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார், ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கடைகள் ஆக்கிரமிப்பு; போலீசார் வழக்கு: திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக வந்த புகாரில், ரூரல் போலீசார் ஆய்வு நடத்தினர். அப்பகுதியில் உள்ள இரண்டு பேக்கரி முன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல், ராம் நகர், ராமமூர்த்தி நகர் பகுதிகளில் வடக்கு போலீசார் ஆய்வு செய்தனர். அங்கும், மக்களுக்கு இடையூறாக கடைகள் போடப்பட்டிருந்தன. கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வடக்கு மற்றும் ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி மோதி ஒருவர் பலி: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர், கலியபெருமாள் மகன் சாத்தப்பன், 26. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, கோவையில் இருந்து திருவாரூர் செல்வதற்காக, பல்லடம் வழியாக தனது பைக்கில் வந்துள்ளார். கே.என்.புரம் அருகே வந்தபோது, அங்கு நின்றிருந்த லாரி பின்புறம், சாத்தப்பனின் பைக் மோதியது. படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு, போலீசார் அனுப்பி வைத்தனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருட்டு; வாலிபர் கைது: திருப்பூர், பூலுவப்பட்டி தோட்டத்து பாளையத்தை சேர்ந்தவர் தர்மேந்திரா, 34; பனியன் கம்பெனி தொழிலாளி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர், 35, என்பவர் தர்மேந்திரா வசிக்கும் காம்பவுண்டுக்குள் சென்று, அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு லிட்டர் பெட்ரோலை திருடியுள்ளார். மேலும், அவரது வீட்டு ஜன்னலை திறந்து மொபைல்போனை திருடியுள்ளார். அதைபார்த்த தர்மேந்திரா, ராஜசேகரை பிடித்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

0 comments: