Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by farook press in ,    

விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதால் சுங்க இலாகா உளவு பிரிவு உதவி கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கம் கடத்தல் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது. 2013–ம் ஆண்டு விமான நிலையத்தில் ரூ.13 கோடி தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ரூ.42 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகளும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் கைப்பற்றினர்.
தங்கம் கடத்தலில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு பிடிபட்டனர். கொழும்பு, துபாய், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. தங்கம் கடத்தல் இந்தியாவில் பிற விமான நிலையங்களை விட சென்னை விமான நிலையத்தில் தான் அதிகமாக நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் அகர்வால் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக சந்திரசேகர் பதவி ஏற்றார். சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது பிடிபட்டவர்களுக்காக 6 பேர் வந்து பெண் சுங்க இலாகா அதிகாரியை மிரட்டினார்கள். இது தொடர்பாக விமான நிலைய போலீசாரும் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.
இதைதொடர்ந்து விமான நிலைய சுங்க இலாகா உளவு பிரிவு உதவி கமிஷனர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு மத்திய கலால் பிரிவுக்கு மாற்றப்பட்டார். விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா பிரிவில் பணியாற்றும் மேலும் பலரை இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிகிறது. தங்கம் கடத்தல் சம்பவங்களை குறைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: