Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்தது.  நேற்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைந்த மங்கள்யான் விண்கலம் புகைப்படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தில் உள்ள வண்ணப் புகைப்பட கேமரா எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்கள் அனைத்தும் நல்ல தரத்தில் உள்ளன என்று இஸ்ரோ தெரிவித்தது. தற்போது மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் இஸ்ரோவின் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. 7300 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று இஸ்ரோ பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளதா? அதன் மேற்பரப்பு எப்படி இருக்கிறது? அங்கு மீத்தேன் வாயு உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்து உள்ளது. இதற்கு தேவையான கருவிகள் அதில் பொருத்தப்பட்டு உள்ளன. மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி இதுபற்றிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வைக்கும். மேலும், படங்களையும் எடுத்து அனுப்பி வைக்கும். மங்கள்யானின் ஆயுள்காலம் 6 மாதங்கள் ஆகும். அதுவரை அது செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி தனது பணியை வெற்றிகரமாக மேற்கொள்ளும். மங்கள்யான் விண்கலத்தின் செயல்பாடுகள் பெங்களூரை அடுத்து பைலாலு, அமெரிக்காவில் உள்ள கோல்டுஸ்டோன், ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட், ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா ஆகிய 4 இடங்களில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கண்காணிக்கப்படும்

0 comments: